2011-06-05 14:42:31

குரோவேசியாவின் Zagreb நகர் சதுக்கத்தில் இளையோருடன் திருத்தந்தை சந்திப்பு


ஜூன் 05,2011. சனிக்கிழமை மாலையில் குரோவேசியாவின் தலைநகர் Zagreb நகரின் முக்கியமானதொரு சதுக்கத்தில் இளையோரைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தித்து, திருவிழிப்புச் செபவழிபாட்டை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறும் இச்சதுக்கத்தில், இவ்வுலகம் சார்ந்த ஒலிகளே அதிகம் நிறைந்திருக்கும். இன்று இச்சதுக்கத்தில் ஆன்மீக உணர்வுகளுடன் நீங்கள் கூடியிருப்பதால், இந்த இடமே ஒரு கோவிலைப் போல் மாறிவிட்டது. இக்கோவிலின் கூரையாக மேகங்களே உள்ளன என்று தன் உரையை ஆரம்பித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் உரைக்கு முன், அக்கூட்டத்தில் பேசிய இரு இளையோர் தங்கள் வாழ்வில் இயேசுவைக் கண்டதால் உண்டான மாற்றங்களைப் பகிர்ந்தனர். நாம் எந்த நிலையில் இருந்தாலும், இறைவன் நம்மைத் தேடி வரும்போது, இறைவனை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, நம்மில் உருவாகும் மாற்றங்களை இவ்விரு இளையோரின் பகிர்வுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன என்று கூறினார் திருத்தந்தை.
இளமை என்பது வாழ்வின் பொருளை உணர்ந்து கொள்ள வழங்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பருவம். இப்பருவத்தில் மனித வாழ்வின் எல்லைகள் விரிகின்றன, சக்தி வாய்ந்த உணர்வுகள் வெளிப்படுகின்றன, மற்றும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பல்வேறு சவால்கள், தேடல்கள் நிறைந்த இந்தப் பருவத்தில் 'நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?' (யோவான் 1:38) என்று உங்களைக் கேட்கும் இயேசுவுக்கு நீங்கள் தரக்கூடிய பதில் என்ன? நீங்கள் அவரைத் தேடுவதற்கு முன், அவர் உங்களைத் தேடி வருகிறார், உங்களை வழி நடத்த தன் கரங்களை நீட்டுகிறார். இயேசுவின் கரம் பற்றி, அவர் காட்டும் பாதையில் செல்லுங்கள்.
அசிசியின் பிரான்சிஸ், கிளாரா, குழந்தை இயேசுவின் தெரேசா, தொமினிக் சாவியோ என்று பல இளையோர் உங்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளனர். குரோவேசிய நாட்டைச் சேர்ந்த அருளாளர் Ivan Merz என்ற இளைஞரும் உங்கள் வழிகாட்டி. முதல் உலகப் போரின் அழிவுகளாலும், தன் உயிர்த்தோழி Gretaவின் மரணத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட Ivan, முதல் உலகப் போருக்குப் பின், இளையோர் மத்தியில் மிகத் தீவிரமான பிறரன்புச் சேவையில் ஈடுபட்டார். அவர் மேற்கொண்ட கடின உழைப்பினால் உடல் நலம் குன்றி, 1928ம் ஆண்டு தனது 32வது வயதில் இறைபதம் சேர்ந்தார். இறைவனிடம் இளையோரைக் கொணர்வதற்கென தன் வாழ்வை அர்ப்பணித்த Ivan நமக்கெல்லாம் சிறந்த ஒரு வழிகாட்டி.
இவ்விதம் இளையோருக்கு உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் உள்ளத்தில் இளையோருக்குத் தனிப்பட்ட ஓர் இடம் உள்ளதென்று கூறி, அவர்களுக்குத் தன் ஆசீரை வழங்கினார்.









All the contents on this site are copyrighted ©.