2011-06-05 14:42:43

குரோவேசிய நாட்டில் குடும்ப விழா திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை


ஜூன் 05,2011. இத்திருப்பலியில் கூடியிருக்கும் அன்புக் குடும்பங்களுக்காகவும் இன்னும் வானொலி, மற்றும் தொலைகாட்சி மூலம் நம்முடன் இணைந்திருக்கும் அனைவருக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுவதாக தன் மறையுரையின் துவக்கத்தில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தூய ஆவியாரின் வருகைக்காக மேலறையில் காத்திருந்த மரியாவும் ஏனையச் சீடர்களும் திருச்சபையின் முதல் உருவகங்கள். இந்த மேலறையில்தான் இயேசு நற்கருணையையும் குருத்துவத்தையும் நிறுவினார். இதே மேலறையில்தான் தனது உயிர்ப்புக்குப் பின் அவர் தூய ஆவியாரைத் தன் சீடர்கள் மேல் பொழிந்தார். அவர்கள் அனைவரும் செபத்தில் இணைந்திருக்குமாறு அவர்களைப் பணித்தார். ஒரே குடும்பமாய் இணைந்திருப்பது தூய ஆவியாரைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனையாக இருந்தது.
குரோவேசிய நாட்டில் கத்தோலிக்கக் குடும்பங்களின் முதல் மாநாடு நடக்கவிருப்பதாகக் கூறி, அதற்கு என்னை குரோவேசிய ஆயர்கள் அழைத்தபோது, அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். குரோவேசியத் திருச்சபை குடும்பங்களுக்கு அளித்துள்ள இந்த முக்கியத்துவம் என்னை மகிழ்விக்கிறது. கிறிஸ்தவக் குடும்பங்களே திருச்சபையைக் கட்டியெழுப்பும் முக்கியக் கூறுகள். ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் இவ்வுலகில் நற்செய்தியைப் பரப்பும் முக்கியக் கருவிகள். விசுவாசத்தின் அரிச்சுவடிகளைக் குழந்தைகளுக்கு வழங்குவதில் குடும்பங்கள் ஆற்றும் பணியை வேறெந்த சமுதாய அமைப்பும் செய்யமுடியாது.
"திருமணத்தால் இணையும் இருவர் உருவாக்கும் குடும்பங்களே இன்றைய உலகில் ஒரு தலைச்சிறந்த நற்செய்தி" என்று அருளாளர் இரண்டாம் ஜான் பால் கூறியுள்ளார். இந்த உண்மையையும், குடும்பங்கள் விசுவாச வாழ்வை வளர்க்க ஆற்ற வேண்டிய பணிகளையும் இன்றையக் குடும்பங்கள் ஆழமாக உணர்ந்து வருவது நல்லதொரு அடையாளம்.
இன்றைய உலகில் பரவி வரும் கடவுள் நம்பிக்கையற்ற பல எண்ணங்களால் முதலில் சிதையுண்டு போவது குடும்பங்களே. இந்தப் போக்கு முக்கியமாக ஐரோப்பாவில் பரவி வருகின்றது. எவ்விதக் கடமைகளும் இன்றி, சுதந்திரம் மட்டுமே வலியுறுத்தப்படும்போது, தன்னலம் மட்டுமே முக்கியமென்று உரைக்கப்படும்போது, இவ்வித எண்ணங்களுக்கு ஒரு மாற்றாகக் குடும்பங்கள் திகழ வேண்டும்.
குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருப்போரே, அஞ்சாதீர்கள். கடவுள் நம்பிக்கையற்ற இந்த உலகில், ஒருவருக்கொருவர் பிரமாணிக்கம் இல்லாமல் வாழும் இந்த உலகில் நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அர்ப்பணம், மற்றும் நீங்கள் கொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கை ஆகியவை இந்த உலகில் திருச்சபை வளர்வதற்கு மிகவும் தேவையானவை என்று திருத்தந்தை மறையுரையில் குடும்பத்தினருக்குத் தன் சிறப்பான வேண்டுகோளை விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.