2011-06-04 15:48:58

திருத்தந்தையின் குரோவேசிய நாட்டிற்கானத் திருப்பயணம்


ஜூன் 04, 2011. இது திருத்தந்தை 16ம் பெனடிக்டின் 19வது வெளிநாட்டுத் திருப்பயணம், ஆனால் குரோவேசியா நாட்டிற்கான முதல் திருப்பயணம். 87.8 விழுக்காட்டு மக்களைக் கத்தோலிக்கர்களாகக் கொண்ட ஒரு நாட்டில் இத்திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் திருப்பயணத்திற்கு மக்களிடம் எத்தனை ஆர்வம் இருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 1945ம் ஆண்டிலிருந்து யுகோஸ்லாவியக் கூட்டமைப்பு குடியரசின் ஓர் அங்கமாக இருந்த குரோவேசியா 1991ம் ஆண்டில் அதிலிருந்து பிரிந்து தனி நாடாக வந்ததிலிருந்து திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1994, 1998, 2003ம் ஆண்டுகளில் அந்நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார். தன் இரண்டாவது திருப்பயணத்தின்போது 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ந் தேதி, கர்தினால் அலோசியஸ் ஸ்டெப்பினாச்சை அருளாளராகவும் அறிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் குரோவேசிய நாட்டிற்கானத் தன் இரண்டு நாள் திருப்பயணத்தைச் சனிக்கிழமையன்று உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு உரோம் நகர் லியனார்தோ டாவின்சி விமான நிலையத்திலிருந்து துவக்கினார்.
வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் உரோம் சர்வதேச விமான நிலையத்தை அடைந்த திருத்தந்தை, அங்கிருந்து விமானம் மூலம் 516 கிலோமீட்டர் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் கடந்து Zagrebன் Pleso சர்வதேச விமான தளத்தை அடைந்தபோது உள்ளூர் நேரம் காலை 11 மணி. அப்போது இந்திய நேரம் பிற்பகல் 2மணி 30 நிமிடம். 12 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகைக்கொண்ட Zagreb நகரின் விமான நிலையத்துக்குள்ளேயே இடம்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெருமெண்ணிக்கையில் விசுவாசிகள் வந்திருந்தனர்.
திருத்தந்தையை ஏற்றி வந்த விமானம் தரையைத் தொட்டதும் குரோவேசிய நாட்டிற்கானத் திருப்பீடத்தூதுவர் பேராயர் ரொபெர்த்தோ கசாரி, முதலில் விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வரவேற்று அழைத்து வந்தார். விமானத் தளத்தில் திருத்தந்தையை வரவேற்க குரோவேசிய அரசுத்தலைவர் இவோ யோசிப்போவிச், சாக்ரெப் பெராயர் கர்தினால் யோசிப் பொசானிச், குரோவேசிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் மரின் ஸ்ராகிச் ஆகியோருடன் அரசு மற்றும் தலத்திருச்சபைத் தலைவர்களும் விமானத்தின் கீழே காத்திருக்க, விமானத்திலிருந்து திருத்தந்தை இறங்கி வந்தபோது, மக்களின் ஆராவாரம் பெரிதாக ஒலித்தது. இந்த விமான தளத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறு மேடையை நோக்கி திருத்தந்தையை அரசுத்தலைவர் அழைத்துச் செல்ல, அந்நாட்டு தேசிய பாரம்பரிய உடை அணிந்த ஒரு குடும்பம் குழந்தைகளுடன் முன்வந்து திருத்தந்தைக்கு மலர்களைப் பரிசாக வழங்கியது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அந்நாட்டில் மேற்கொள்ளும் இந்த இரண்டு நாள் திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, அந்நாட்டின் தேசிய குடும்ப நாள் கொண்டாட்டங்களில் பங்கு கொள்வது என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.