2011-06-03 15:37:28

லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது நோவா பேழையை மக்களின் பார்வைக்கு வைக்கும் முயற்சிகள்


ஜூன் 03,2011. பழைய ஏற்பாட்டின் வெள்ளப்பெருக்கின்போது நோவா உருவாக்கிய ஒரு பேழையைப் போன்று ஒரு பெரிய பேழையை அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது Thames நதியில் மக்களின் பார்வைக்கு வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டச்சு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் Johan Huibers, நோவா அமைத்தப் பேழையைக் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, அதன் பயனாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் Rotterdam அருகில் Dordrecht என்ற நதியில் நோவா காலத்துப் பேழையை மீண்டும் உருவாக்கியுள்ளார்.
10 இலட்சம் பவுண்ட் அதாவது, 7 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேழை, ஏறத்தாழ நோவா காலத்தில் உருவான பேழையின் அளவில் உள்ளதென்றும் இதை இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது Thames நதியில் மிதக்க விடுவதற்கு இலண்டன் நகர் மேயர் Boris Johnson ஒப்புதலை கேட்டிருப்பதாகவும் பொறியியலாளர் Huibers ஆங்கிலக் கத்தோலிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் கூறினார்.
நோவா காலத்துப் பேழையைப் பற்றி மக்களுக்கு, முக்கியமாக இளையோருக்குச் சொல்வதால், கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை அவர்கள் மனதில் விதைக்க முடியும் என்றும் இதற்காகவே தான் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் டச்சுப் பொறியியலாளர் Huibers மேலும் கூறினார்.
Thamesல் இந்தப் பேழை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டால், அப்போது நோவாவின் பேழையில் இருந்த மிருகங்களைப் போல் 'ரோபோ' வடிவில் அமைத்து, மக்களைக் கவரும் திட்டமிருப்பதாகவும் Huibers கூறினார்.








All the contents on this site are copyrighted ©.