2011-06-03 16:20:34

ஜூன் 04. வாழ்ந்தவர் வழியில் ....


இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரருமான பெ. வரதராஜுலு நாயுடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1887ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்தார். மருத்துவரும் பத்திரிக்கையாளருமான இவர், சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
உயர்நிலைக் கல்வி கற்கும்பொழுதே நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. "முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
1906ம் ஆண்டில் 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1916ல் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றார். 1918ல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக முதல் சிறைவாசம் விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில் வரதராஜுலுவின் சார்பில் சி. இராஜகோபாலாச்சாரி எழுப்பிய சட்ட நுணுக்கவாதத்தால், அவர் விடுதலை பெற்றார். அரசுக்கு எதிராக நடந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு 1919லும் 1923லும் சிறைத்தண்டனைகளை அனுபவித்துள்ளார்.
1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்தபொழுதும், 1921ல் மீண்டும் சேலம் வந்தபொழுதும் வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் வரதராஜுலுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்துவிட்டார்.
1922ல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்டபொழுது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான் வரிகட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார். வரி மறுப்பைக் குறிப்பிட்டு வரதராஜுலு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம், காந்தியடிகளின் "யங் இந்தியா"வில் வெளிவந்தது.
ஜி. சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு வி. க.வைத் தொடர்ந்து, தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் வரதராஜுலு.
"தமிழ்நாடு" இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து பணியாற்றிய வரதராஜுலுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும். 1925 ல் தமிழ்நாடு வாரச் செய்தி இதழைத் துவக்கினார். 1931ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழின் சென்னைப் பதிப்பைத் துவக்கினார். பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் அது விற்பனை செய்யப்பட்டது.
1951ல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952ல் நடைபெற்றப் பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.
"தென்னாட்டுத் திலகராக"ப் புகழ்பெற்ற வ.உ.சி, 1934ல் "தேசிய சங்கநாதம்" எனும் தலைப்பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இவர் தன் 70ம் வயதில் 1957ம் ஆண்டு ஜூலை 23ந்தேதி இறைபதம் சேர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.