2011-06-03 15:36:01

குரோவேஷியாவில் திருத்தந்தையின் இரண்டு நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்தத் திருப்பயணம்


ஜூன் 03,2011. இச்சனிக்கிழமை மற்றும் ஞாயிறன்று குரோவேஷியாவில் இரண்டு நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்தத் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தனது 19வது மேய்ப்புப்பணிச் சார்ந்த வெளிநாட்டுத் திருப்பயணத்தையொட்டி குரோவேஷியாச் செல்லும் திருத்தந்தை, முதலில் அரசுத்தலைவர் Ivo Josipovicயை அரசுத்தலைவர் மாளிகையில் சென்று சந்தித்து உரையாடிய பின்னர், Zagrebன் திருப்பீடத்தூதரகத்தில் பிரதமர் Jadranka Koserயும் சந்தித்து உரையாடுவார்.
பின்னர் அந்நகரின் தேசிய அரங்கில் அரசியல், கல்வி, தொழில், கலாச்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்தோரையும், மதப்பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுகளின் அரசியல் தூதுவர்களையும் சந்திப்பார். சனிக்கிழமையின் இறுதி நிகழ்ச்சியாக திருத்தந்தை இளைஞர்களுடன் இணைந்து செப வழிபாட்டில் கலந்துக் கொள்வது இடம்பெறும்.
ஞாயிற்றுக்கிழமைக்கான திருத்தந்தையின் பயணத்திட்டத்தில், தேசியக் கத்தோலிக்கக் குடும்ப நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு தலைநகரில் திருப்பலி நிறைவேற்றுவது, குரோவேஷிய ஆயர்களுடன் மதிய உணவருந்தி உரையாடுவது, அந்நாட்டு ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், குருமடமாணவர்கள் ஆகியோருடன் செபவழிபாட்டில் கலந்துகொண்ட பின், அருளாளர் கர்தினால் Alojzije Stepinacன் கல்லறையைத் தரிசிப்பது ஆகியவை இடம்பெற உள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.