2011-06-02 13:10:33

சூடான் நாட்டு வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் - உலக மதத் தலைவர்களின் விண்ணப்பம்


ஜூன் 02,2011. ஆப்ரிக்காவின் சூடான் நாட்டு Abyei எல்லைப் பகுதியில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அங்கு நிலவி வரும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று அகில உலகின் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இப்பிரச்சனைகள் தொடர்பாக, ஜெர்மனியில் அண்மையில் சந்தித்த இத்தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் Darfurல் வாழும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் குண்டு வீச்சுகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை வெளியிட்டனர்.
வரும் ஜூலை 9 முதல் தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிவதற்கு மக்கள் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை ஒப்புதல்கள் கிடைத்தாலும், இந்தப் பிரிவினை சுமுகமாக நடைபெற முடியாமல் வன்முறைகள் நிகழ்ந்து வருவது உலகத் தலைவர்களுக்குக் கவலை தருகிறது என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
சூடான் நாடு இரு நாடுகளாகப் பிரிவதற்கு நேரம் நெருங்கி வரும் இவ்வேளையில் இன்னும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சனை, மற்றும் இயற்கை வளங்களைப் பகிர்வது குறித்த பிரச்சனைகள் தொடர்வது நல்ல அடையாளம் இல்லை என்று பன்னாட்டுத் தலைவர்கள் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Abyei பகுதியில் இம்மாதம் ஏற்பட்ட பல வன்முறைகளால் அப்பகுதியில் இருந்து 40,000 மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்குச் சிதறிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா.அறிக்கையொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.