ஜூன் 01,2011. நீங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக எண்ண வேண்டாம், திருச்சபை உங்களுடன்
இணைத்துள்ளது, முக்கியமாக செபத்தின் வழியே உங்களுடன் பயணிக்கிறது என்று திருத்தந்தை தன்னிடம்
கூறியதாக லிபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Giovaanni Innocenzo Martinelli
கூறினார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டை அண்மையில் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசிய
Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, திருத்தந்தையைச் சந்தித்தது தனக்கும், லிபிய மக்களுக்கும்
நம்பிக்கையையும், மன உறுதியையும் அளித்துள்ளது என்று கூறினார். பேராயர் Martinelli
அமைதி மற்றும் நீதிக்கான திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்,
மற்றும் நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்த திருப்பீட அலுவலகத்தின் செயலர் பேராயர் தொமினிக்
மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தபின் மீண்டும் லிபியாவுக்குத் திரும்பியுள்ளார். இதற்கிடையே,
தென் ஆப்ரிக்கத் தலைவர் Jocob Zuma லிபிய அரசுத் தலைவர் Muammar Gaddafiயை இத்திங்களன்று
சந்தித்துள்ளது நம்பிக்கையை உருவாக்கும் ஒரு செயல்பாடு என்றும், லிபியப் பிரச்சனைகளுக்கு
எளிதில் தீர்வுகள் கிடைக்காது எனினும், நம்பிக்கை தரும் செயல்பாடுகளும் நடைபெற்று வருகின்றன
என்று Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Martinelli கூறினார்.