2011-06-01 16:09:59

இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடக்க காவல் துறையினர் பயன்படுத்திய வன்முறைகளுக்கு கத்தோலிக்கக் குருக்கள் கண்டனம்


ஜூன் 01,2011. இலங்கையில் கொழும்புக்கருகே Katunayake எனும் இடத்தில் இத்திங்களன்று மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடக்க காவல் துறையினர் அளவுக்கு மீறி பயன்படுத்திய வன்முறைகளை கத்தோலிக்கக் குருக்களும் இன்னும் பல மனிதஉரிமை ஆர்வலகளும் வன்மையாய் கண்டித்துள்ளனர்.
பணி ஒய்வு காலத்தில் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சலுகைகளைக் கோரி 18,000க்கும் அதிகமானோர் ஈடுபட்ட இந்தப் போராட்டத்தை அடக்க காவல் துறையினர் தடியடி, கண்ணீர்ப் புகை, மற்றும் அளவுக்கு மீறிய வன்முறைகளைப் பயன்படுத்தியதால் மூன்று பேர் இறந்தனர் என்றும், மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்றும், இது குறித்து அரசு தீர விசாரணை நடத்த வேண்டும் என்றும் இளம் கிறிஸ்தவ உழைப்பாளர்கள் அமைப்பின் ஆலோசகரான அருள்தந்தை Reid Shelton Fernando கூறினார்.
காவல் துறையினர் மேற்கொண்ட இந்த வன்முறை, அடிப்படை மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று Laxman Rosa என்ற கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.