2011-05-31 16:22:48

ஜூன் 01, வாழ்ந்தவர் வழியில்...


பல ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் மனங்களில் நம்பிக்கை மலர்களை மலரச் செய்தவர் ஹெலன் கெல்லர். 1880ம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஹெலன் பிறந்தபோது முழு உடல்நலம் வாய்ந்த குழந்தையாகவே பிறந்தார். இவர் 18 மாதக் குழந்தையாய் இருந்தபோது, கடுமையான மூளைக்காய்ச்சலால் தாக்கப்பட்டு, பார்க்கும் திறன், கேட்கும் திறன், பேசும் திறன் மூன்றையும் இழந்தார். தனது தேவைகளையும், உணர்ச்சிகளையும் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன், அடக்க முடியாத, முரட்டுத்தனமானக் குழந்தையாக மாறினார்.
1887ஆம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அவர், அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். அங்கே ஆன் சல்லிவன் என்ற பெண் ஹெலனின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவ்விருவருக்கும் இடையே அடுத்த 49 ஆண்டுகள் இணைபிரியாத உறவொன்று உருவானது.
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையை ஹெலனுக்கு ஆன் சல்லிவன் கற்பித்தார். மேலும், ஹெலனின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளை ஹெலன் கற்றார்.
1904ம் ஆண்டு, ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். 1900ம் ஆண்டு, ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்ந்து 1904ம் ஆண்டு பட்டம் பெற்றார். உலக வரலாற்றில், கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் காது கேளாத, கண்பார்வையற்ற மனிதர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைக்காதவரான ஹெலன், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிசக் கொள்கைகளையும் ஆதரித்து, பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். பார்வைத்திறன் அற்றோருக்கான பணி நிறுவனம் ஒன்றை ஹெலன் தன் பெயரிலேயே உருவாக்கினார். தன் தலைசிறந்த வழிகாட்டி ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட ஹெலன் கெல்லர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
ஹெலன் கெல்லர், 1968ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, தன் 87வது வயதில் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.