2011-05-30 16:02:29

திருத்தந்தையின் மூவேளைச் செப உரை


மே 30,2011. உண்மையான மகிழ்வைக் கண்டு கொள்ள ஒவ்வொரு மனிதனாலும் இயலும் என்பதை மையக்கருத்தாகக் கொண்டு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பிலிப்புவின் வருகையையும் உயிர்த்த இயேசு குறித்த நற்செய்தி அறிவிப்பையும் பற்றி பேசும் திருத்தூதர் பணி நூலின் எட்டாம் அதிகாரம், 'அதனால் அந்நகரில் மகிழ்ச்சி உண்டாயிற்று' என்றுரைக்கும் இறைவார்த்தைகளை மேற்கோள்காட்டி உரையாற்றிய பாப்பிறை, நம்பிக்கையை விதைக்கும் வார்த்தைகளாக இவை உள்ளன என்றார்.
மனிதனால் உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ள முடியும், ஏனெனில் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் வாழ்வு மலர்கின்றது என்றார் திருத்தந்தை.
நற்செய்தியின் குணப்படுத்தும் சக்தியானது ஒரு பயனுள்ள ஆறு போல் கடந்த நூற்றாண்டுகளில் ஓடி மனித குலத்தை வளப்படுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நகர்களுக்கு அமைதியையும் நம்பிக்கையும் எடுத்துச் சென்றவர்கள் வரிசையில் மிலானின் புனிதர் சார்ல்ஸ் பொரோமேயோவையும் கல்கத்தாவின் அருளாளர் அன்னை தெரேசாவையும் எடுத்துக்காட்டுகளாக முன்வைத்தார்.
புதிய அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒரு மிகப்பெரும் மறைபோதகராக இருந்தார் என மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.