2011-05-30 16:02:15

ஒற்றுமைக்கானப் புதிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறார் சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவர்


மே 30,2011. இந்தியாவின் மூன்று ரீதி கத்தோலிக்கர்களும் தங்களின் கடந்த கால முரண்பாடுகளை மறந்து, ஒற்றுமைக்கானப் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார் சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
கடந்த காலங்களில் நம் கருத்து வேறுபாடுகளால் பல்வேறு முரண்பாடுகளைச் சந்தித்திருக்கலாம், ஆனால் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து வருங்காலத்தை நோக்க வேண்டிய காலம் இது என்றார் பேராயர் ஆலஞ்சேரி.
சீரோ மலபார் ரீதியின் தலைவராக இஞ்ஞாயிறன்று கொச்சியின் புனித மேரி பசிலிக்காவில் பொறுப்பேற்ற வைபவத்தில் உரையாற்றிய பேராயர், வழிபாடு மற்றும் நிர்வாகம் தொடர்புடைய காரணங்களால் தங்களுக்குள்ளேயே பிரிந்திருக்கும் மலபார் ரீதி கத்தோலிக்கர்களுக்கும் ஒற்றுமைக்கான அழைப்பை முன்வைப்பதாக தெரிவித்தார்.
'அன்பு மற்றும் உண்மையின் கலந்துரையாடல் வழி பணி' என்பதைத் தன் விருது வாக்காக எடுத்துள்ள பேராயர் ஆலஞ்சேரி, மக்கள் மற்றும் சமுதாய நலனுக்காக இணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சிரோ மலபார் ரீதியின் புதியத் தலைவராக பதவியேற்ற மற்றும் பேராயராக உயர்த்தப்பட்ட இந்த நிகழ்வில், இந்தியாவிற்கானத் திருப்பீடத்தூதர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ மற்றும் பல்வேறு கிறிஸ்தவச் சபைகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.