2011-05-30 16:03:06

இறை வார்த்தையை எடுத்துரைப்பது ஆயருக்குரிய தலையாயக் கடமை - இந்திய ஆயர்களுக்குத் திருத்தந்தையின் உரை


மே 30,2011. இரண்டாம் வத்திக்கான் பொது அவை கூறியுள்ளதுபோல், ஆயருக்குரிய பல்வேறு கடமைகளில், இறை வார்த்தையை எடுத்துரைப்பதே அவரது தலையாயக் கடமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி தற்போது ஆந்திராவிலிருந்தும், கேரளாவிலிருந்தும் உரோம் நகர் வந்துள்ள 22 ஆயர்களை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு உரையாற்றுகையில், ஆயர்களின் கடமைகளை இவ்விதம் எடுத்துரைத்தார்.
தங்களிடம் பணியாற்றும் குருக்கள் மற்றும் தகுதியுள்ள பொதுநிலையினர் ஆகியோரின் உதவியுடன், விவிலியம் மற்றும் திருச்சபையின் பாரம்பரியத்தில் வெளியாகியுள்ள இறை வார்த்தையை மக்களுக்குப் பறைசாற்றும் பணியில் ஆயர்கள் ஈடுபட வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் குருக்களும் துறவியரும் ஆர்வமாய் ஈடுபட்டிருக்கும் சமுதாயப் பணிகள் குறித்து தன் மகிழ்வை வெளியிட்டத் திருத்தந்தை, கடவுள் உலகிற்கு அளித்திருக்கும் மிகப்பெரும் கொடையான அவரது அன்பை இப்பணிகளின் மூலம் திருச்சபை தொடர்ந்து ஆற்றி வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோருக்கான இல்லங்கள் வழியே திருச்சபை ஆற்றி வரும் பல்வேறு சேவைகளையும் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, சிறு சேமிப்புத் திட்டங்கள் (Microcredit) மூலம் ஏழைகள் தங்களுக்கே உதவிகள் செய்து கொள்ளும் வழிகளைத் திருச்சபை வறியவர்களுக்குச் சொல்லித் தருவதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் உள்ள குடும்பங்கள் 'குட்டித் திருச்சபைகள்' (Domestic Churches) என்று கூறியத் திருத்தந்தை, மறைகல்வி, செபங்கள் வழியே இறையன்பைப் பறைசாற்றும் சாட்சிகளாக கிறிஸ்தவ குடும்பங்கள் திகழ்வதற்கு ஆயர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று சிறப்பாகக் கேட்டுக் கொண்டார்.
இறையன்னை, புனித பேதுரு, பவுல் ஆகியோரின் பரிந்துரைகளின் வழியே ஆயர்கள் தங்கள் மந்தைகளைத் திறம்பட நடத்துவதற்கு, திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு வழங்குவதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.