2011-05-28 15:35:14

மே 29, வாழ்ந்தவர் வழியில்...


‘புதிர்களின் இளவரசன்’ (Prince of paradox) என்று Time வார இதழ் பெருமையுடன் விவரித்த ஓர் ஆங்கில எழுத்தாளர் G.K.Chesterton என்று அழைக்கப்படும் Gilbert Keith Chesterton. 1874ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி இலண்டனில் பிறந்த இவர், தன் எண்ணங்களைத் தனக்கே உரிய பாணியில் எழுதி வந்ததால், ‘புதிர்களின் இளவரசன்’ என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை இவர் திருடர்களைப் பற்றி எழுதியது இதோ: "சொத்துக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் திருடர்கள். அதுவும், பிறரது சொத்துக்கள் அவர்களது சொத்துக்களாகும்போது, அவற்றை இன்னும் அதிகமாய் மதிப்பவர்கள்." என்று எழுதினார்.
கதை, கவிதை, கட்டுரைகள், நாடகம் என்று பல வடிவங்களில் தன் கருத்துக்களை வெளியிட்ட Chesterton, மெய்யியல், இறையியல் சார்ந்த பல நூல்களை எழுதினார். இவரது எண்ணங்கள் மகாத்மா காந்தியைப் பெரிதும் கவர்ந்தன. எனவே, இலண்டன் நாளிதழ் ஒன்றில் இவர் எழுதியிருந்த ஒரு பகுதியை இந்திய நாளிதழில் மறுபதிப்பு செய்யும்படி காந்தி வலியுறுத்தினார்.
Anglican கிறிஸ்தவரான Chesterton, கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தார். உலக வரலாற்றை கிறிஸ்துவுடன் இணைத்து இவர் எழுதிய The Everlasting Man என்ற நூல் மிகவும் ஆழமான எண்ணங்கள் கொண்டவை. G.K.Chestertonஐ "அளவற்ற அறிவுத்திறனுக்குச் சொந்தக்காரர்" (“He was a man of colossal genius”) என்று மற்றொரு புகழ் பெற்ற எழுத்தாளரான George Bernard Shaw புகழ்ந்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.