2011-05-28 15:35:30

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, அம்மா, அப்பா அல்லது குடும்பத்தினரிடம் சொல்வது என்ன? "அம்மா, போயிட்டு வரேன்." என்பதே நம் வழக்கமான சொற்கள். யாராவது "நான் போறேன்" என்று சொன்னால், அதை அபசகுனமான வார்த்தைகள் என்று சொல்கிறோம், அல்லது அப்படி சொல்பவர் கோபத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறோம். நமது தமிழ் இலக்கியங்களிலும் போருக்குப் புறப்படும் மகனிடமும் தாய் "சென்று வா மகனே, வென்று வா." என்று சொல்லியே அனுப்பி வைத்ததாகக் காண்கிறோம். யாரும் நம்மைவிட்டுப் பிரிந்து செல்லும்போது, அவர்கள் திரும்பி வருவர் என்று எண்ணத்தில் அனுப்பி வைப்பதே நம்பிக்கையைத் தரும் ஒரு மனநிலை.

"போயிட்டு வரேன்" என்ற சொற்களைப் போல் ஆங்கிலத்திலும், தமிழிலும் பிரிந்து செல்வதை உணர்த்தும் பல அழகான வார்த்தைகள் உள்ளன. ஆங்கிலத்தில் 'Goodbye' அல்லது 'Farewell' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். Goodbye என்ற வார்த்தையில் பொதிந்திருக்கும் சொற்கள், எண்ணங்கள் 'God be with you' என்று சொல்வார்கள். பிரிந்து செல்பவர் நலமாக, மகிழ்வாக இருக்கும்படி ஆசீர்வதிக்கும் வார்த்தைகள் Farewell என்ற வார்த்தையில் உண்டென்று நாம் உணரலாம்.

தமிழில் நாம் 'பிரியாவிடை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். 'நான் உன்னைவிட்டு இப்போதைக்கு விடை பெறுகிறேன். ஆனால், உன்னைவிட்டு, இந்த வீட்டை விட்டு நான் பிரியவில்லை' என்பவைகளைச் சொல்லாமல் சொல்வது 'பிரியாவிடை' என்ற அந்தச் சொல். இயேசு தன் சீடர்களுக்கு இறுதி இரவுணவில் சொன்ன பிரியாவிடையை சென்ற வாரமும் இந்த வாரமும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம்: "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." (யோவான் 14: 18) என்ற வார்த்தைகளை இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம்.

"நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்." (யோவான் 14: 3) என்ற வார்த்தைகளை சென்ற வாரம் நற்செய்தியில் கேட்டோம். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றி இயேசு பேசினார். இந்த வாரம் தான் சென்றபின் அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." (யோவான் 14: 16)

இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய இந்த பிரியாவிடை நமது இல்லங்களில் நடைபெறும் ஒரு காட்சியை என் மனக்கண் முன் கொண்டு வருகிறது. அப்பா, அல்லது அம்மா வேலைக்குக் கிளம்புகிறார்கள், அல்லது ஊருக்குக் கிளம்புகிறார்கள். ஓரளவு விவரம் தெரிந்த தங்கள் குழந்தைகளைத் தாத்தா, அல்லது பாட்டியிடம் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு காட்சி இது. அவர்கள் கிளம்பும்போது குழந்தை அழுதால், பெற்றோர் அந்தக் குழந்தைக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். திரும்பி வரும்போது மிட்டாய், சாக்லேட், பொம்மை வாங்கி வருவதாக இந்த வாக்குறுதிகள் இருக்கும். பல நேரங்களில் குழந்தைகள் இந்த வாக்குறுதிகளால் சமாதானம் அடைந்து பெற்றோருக்குப் பிரியாவிடை அளிப்பார்கள்.

பெற்றோர் தந்த வாக்குறுதிகளில் குழந்தைக்கு எது மிகவும் பிடித்த பகுதியாக இருக்கும் என்று சிந்திக்கலாம். அவர்கள் வாங்கி வரப்போகும் பொருட்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா, அல்லது அந்தப் பொருட்களுடன் தாயோ தந்தையோ மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்பது குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா? ஒருவேளை, தாயோ தந்தையோ திரும்பி வராமல், அந்தப் பொருட்களைத் தபால் மூலமோ அல்லது வேறொவர் மூலமோ அனுப்பிவைத்தால், குழந்தைகள் முழு மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், பரிசுப் பொருட்களைத் தாங்கியவண்ணம் தாயோ, தந்தையோ மீண்டும் வீடு திரும்புவதைக் காணும் குழந்தைகளின் மகிழ்ச்சி பல மடங்காகும். இந்த வாரமும், சென்ற வாரமும் இயேசு கனிவு மிகுந்த ஒரு பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

என் தந்தையின் இல்லத்தில் நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்வேன் என்றும், தூய ஆவியாரைத் தருவேன் என்றும் மட்டும் இயேசு சொல்லியிருந்தால், சீடர்களின் மனங்கள் மகிழ்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இவ்விரு வாக்குறுதிகளோடு, தான் திரும்பி வந்து அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அவர்களோடு என்றும் இருப்பதாகவும் இயேசு சொன்ன சொற்களே சீடர்களின் மனதில் இன்னும் அதிகமான நிறைவை, நம்பிக்கையைத் தந்த சொற்கள்.

பரிசுகள் பலவற்றை ஏந்திக் கொண்டு, இயேசு நம் இல்லம் தேடி, உள்ளம் தேடி வருவதை ஓர் ஆன்மீக எழுத்தாளர் அழகாக விவரிக்கிறார்.... நம் இல்லம் தேடி வரும் இயேசு, தன் முழங்கையை வைத்து நம் இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்துவாராம். காரணம் என்ன? அவரது இரு கைகளிலும் பரிசுகள் குவிந்திருப்பதால், அவரது கரமோ, விரல்களோ அழைப்பு மணியை அழுத்தும் நிலையில் இல்லை என்பதே காரணம். அழகான கற்பனை இது.

பரிசுகளைப் பற்றி, கை நிறைய பரிசுகளைச் சுமந்து வரும் இயேசுவைப் பற்றி பேசும்போது, ஒரு சிறு கற்பனைக் கதை நினைவுக்கு வருகிறது. பரிசுப் பொருள் வந்திருந்தது. பரிசு வந்திருந்த 'பார்சல்' மிக அழகாக இருந்தது. தங்க இழைகளால் ஆன 'ரிப்பனால்' கட்டப்பட்டு, மானும், குருவியும் போட்ட வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்டு... பரிசுப் பொருள் வந்திருந்தது. "சார், பரிசு என்ன சார்?" என்று அருகிருந்தவர் கேட்டார். பார்சலை வைத்திருந்தவர், "கொஞ்சம் பொறப்பா! இந்தக் காகிதத்தைப் பாத்தியா? மானும், குருவியும்... அடடே மயிலும் இருக்கே... அதுவும் எத்தனை 'கலர்'ல இருக்கு..." என்று அவர் பார்சலை வியந்து கொண்டேயிருந்தார். அருகிலிருந்தவர் பொறுமை இழந்தார். பரிசு வந்தால், உள்ளிருப்பதைப் பார்ப்பாரா, வெளி பார்சலையே பார்த்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாரே என்று அவர் நினைத்தார். பல நேரங்களில் பரிசுகளை விட பரிசுகள் சுற்றப்பட்டுள்ள காகிதங்கள் நம் கவனத்தை ஈர்த்துள்ளன என்பது உணமைதானே! அதேபோல், பரிசுகளைத் தாங்கி வரும் இயேசுவை விட பரிசுகள் நமது கவனத்தை அதிகம் கவர்ந்த நேரங்களும் உண்டல்லவா?

பரிசுகள் தாம் முக்கியம் என்றால், கைநிறைய பரிசுகளை அள்ளிவரும் இறைவன், அவைகளை நம் இதயத்தின் வாசலில் விட்டுவிட்டு, மறைந்திருக்கலாம் கிறிஸ்மஸ் தாத்தாவைப் போல்... கதவைத் திறக்கும் நமக்கு ஆச்சரியமான பரிசுகள் மட்டும் காத்திருக்கும். பரிசுகளின் நாயகன் இருக்கமாட்டார். இயேசுவின் பாணி வேறு. பரிசுகளுடன் அவரும் நம் இல்லத்தில், உள்ளத்தில் நுழைவதையே பெரிதும் விரும்புகிறார்.

பரிசுகள் வழங்குவதை விட, தன்னை வழங்குவதையே அதிகம் விரும்பும் இயேசு சென்ற வாரமும், இந்த வாரமும் இதே கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார். இதில் மற்றொரு அழகிய அம்சம் என்னவென்றால், இந்தப் பிரியாவிடை உரையை இயேசு தன் இறுதி இரவுணவின்போது கூறினார். அந்த இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய வகையில் சீடர்களிடம் பகிர்ந்தளித்தார் என்பதை நாம் அறிவோம்.

இயேசுவின் வார்த்தைகள் அந்தரத்தில் ஒலித்த வெறும் வார்த்தைகள் அல்ல, அவர் வாழ்வில் நடைமுறையாக்கப்பட்ட உண்மைகள் என்பது சீடர்களுக்கு நன்கு தெரியும். எனவேதான், "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்..." என்று துயரும், கலக்கமும் நிறைந்த அந்த இறுதி இரவுணவில் அவர் சொன்னபோது, அவர்களால் ஓரளவு உறுதி பெற முடிந்தது. மிகவும் கடினமானச் சூழலில் தங்கள் தலைவன் எப்படியும் தங்களோடு இருப்பார் என்பதை அவர்கள் நம்பினார்கள்.

நம் வாழ்வுப் பயணத்தில் நாம் எதை நம்பி பயணத்தை மேற்கொள்கிறோம் என்பதை அவ்வப்போது ஆராய்ந்து பார்ப்பது நல்லது. 20 ஆண்டுகளுக்கு முன், 1991ம் ஆண்டு, நடுவானில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் இயந்திரங்கள் முற்றிலும் நின்றுவிட்டன. எரிபொருள் முற்றிலும் இல்லை என்பதைக் கண்டுபிடித்தனர். தலைமை விமானி பல ஆண்டுகள் விமானம் ஒட்டியவர் என்பதால், அவரால் அந்த பயங்கரமானச் சூழலை சமாளிக்க முடிந்தது. அவசரமாகத் தரையிறங்கவும் முடிந்தது. யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இந்நிலை உருவாகக் காரணம் என்ன என்பது ஆராயப்பட்டது. மிகவும் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டு செய்யப்பட்டிருந்த விமானத்தில், எரிபொருளின் அளவைக் காட்டும் கருவி பழுதடைந்திருந்தது. எனவே அது விமானத்தில் எரிபொருள் முழுமையாக உள்ளதென்று எப்போதும் காட்டிக் கொண்டே இருந்தது. 1000 கி.மி. பயணத்திற்குரிய எரிபொருள் உள்ளதென்ற நம்பிக்கையில் விமானம் கிளம்பியது. 200 கி.மி. கடப்பதற்குள் எரிபொருள் சுத்தமாகத் தீர்ந்துவிட்டது. அத்தனை பெரிய விமானத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஒரு சிறு கருவியே ஆதாரமாய் இருந்தது. அந்தக் கருவி பழுதடைந்து போனால், அதை நம்பிச் செல்லும் அத்தனை உயிர்கள் என்னாவது?

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்வுப் பயணத்தைத் தொடர்கிறோமா அல்லது வேறு பல கொள்கைகளை, கருவிகளை நம்பித் தொடர்கிறோமா என்பதை ஆராய்வது பயனளிக்கும். திசை புரியாமல், வழி தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். இறைமகன் இயேசுவின் மேல் இவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்படி மன்றாடுவோம். சென்ற வாரம் நாம் வேண்டிக்கொண்டதன் தொடர்ச்சியாக, தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைப்போம்.








All the contents on this site are copyrighted ©.