2011-05-27 15:28:54

கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை மேம்படுத்த வேண்டும் - வத்திக்கான் அறிக்கை


மே 27,2011. கப்பல்களின் உரிமையாளர்களும், அவற்றைக் கட்டுபவர்களும் கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் தங்கள் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது.
புலம் பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை இவ்வியாழனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அகில உலக கடற்பகுதி அமைப்புக்கள் ஒருங்கிணைந்து கடல் பயணங்களை இன்னும் பாதுக்காப்பு கொண்டதாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கடற் கொள்ளைக் காரர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதெனவும், நடக்கும் 2011ம் ஆண்டில் மட்டும் இதுவரை 214 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதென்றும், இவற்றில் 26 கப்பல்கள், 522 ஊழியர்கள் இன்னும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
கடற் கொள்ளை என்ற பிரச்சனைக்கு மூலகாரணமாக இருக்கும் வறுமையை ஒழிப்பதற்கு உலக அரசுகள் முயன்றால், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று புலம் பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை வெளியிட்டுள்ள இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.