2011-05-26 15:50:06

மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் காரித்தாஸ்


மே 26,2011. இலங்கையின் காரித்தாஸ் பொறுப்பாளர்கள் இந்தியாவில் சிறைபடுத்தப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் Chilaw மறைமாவட்டத்தில் உள்ள Kalpitiya பங்கைச் சார்ந்த ஆறு மீனவர்கள் ஓராண்டுக்கு முன் இந்திய கடற்பகுதியில் நுழைந்தததையடுத்து, இந்திய அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.
இந்த ஆறு மீனவர்களையும் விடுவிக்க இலங்கையின் Chilaw பகுதி காரித்தாஸ் இயக்குனர் Abraham Barnabas, தான் இந்திய அரசுடன் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து UCAN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் விவரித்தார்.
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தங்கள் வரம்புகளை மீறி அடுத்த நாட்டுக் கடற்பகுதியில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான மீனவர்கள் சிறைகளில் வாடுகின்றனர் என்று காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இவ்விரு நாடுகளின் கடல் பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்படாததால் இந்தப் பிரச்சனை எழுகிறதென்றும், முக்கியமாக, கடலில் புயல்கள் வீசும்போது படகுகள் திசை இழந்து செல்வதும் இப்பிரச்சனைக்கு ஒரு காரணம் என்றும் இலங்கை காரித்தாஸ் ஒருங்கிணைப்பாளர் அந்தோணிமுத்து கூறினார்.
காரித்தாஸ் அமைப்பின் சார்பில் இப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசி வருவதாகவும், இப்பிரச்சனை குறித்து மேலும் பேச தங்கள் அமைப்பின் பிரதிநிதிகளை இவ்விரு நாடுகளும் அண்மையில் அழைத்திருப்பது நம்பிக்கை தரும் ஒரு வாய்ப்பு என்றும் அந்தோணிமுத்து மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.