2011-05-26 15:49:52

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரைப் பயிற்றுவிப்பதற்காக ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம்


மே 26,2011. இந்தியாவில் ஜார்கண்ட் பகுதியில் வாழும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரை இன்றையத் தொடர்பு சாதனங்களில் பயிற்றுவிப்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம் ஒன்று அண்மையில் துவக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட், மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளில் உள்ள பழங்குடியினரிடையே 19ம் நூற்றாண்டில் உழைத்து வந்த கான்ஸ்டன்ட் லீவன்ஸ் என்ற பெல்ஜிய நாட்டு இயேசு சபைத் துறவியின் பெயரைத் தாங்கிய இத்தொடர்பு சாதன நிலையம், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி என்று பல தொடர்பு சாதனங்களில் பழங்குடியினரான இளையோருக்குப் பயிற்சிகள் வழங்கும் என்று அப்பகுதியின் இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை சேவியர் சொரெங் கூறினார்.
பழங்குடியினரின் எண்ணங்கள் பொதுவாக நாட்டின் பல்வேறு தொடர்பு சாதனங்களில் அதிகமாய் கேட்கப்படுவதில்லை என்றும், அக்குறையைத் தீர்க்க இந்த மையம் ஓரளவாகிலும் முயலும் என்றும் அருள்தந்தை சொரெங் மேலும் கூறினார்.
இந்தியாவில் ஏற்கனவே சேவியர் தொடர்புத் துறை மையம் என்ற பெயரில் மும்பையில் புகழ் பெற்றதொரு மையத்தின் ஒரு பகுதியாக லீவன்ஸ் தொடர்பு சாதன நிலையம் இயங்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.