2011-05-26 15:48:49

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சூறாவளிக் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபச் செய்தி


மே 26,2011. இவ்வாரத் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிசூரிப் பகுதியில் Joplin எனும் இடத்தில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் உயிரிழந்தவர்கள், காயப்பட்டவர்கள் மற்றும் பல வழிகளில் பாதிக்கப்பட்டோருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே திருத்தந்தையின் பெயரால் இவ்வனுதாபச் செய்தியை ஒரு தந்தி மூலம் ஆயர் ஜேம்ஸ் ஜான்ஸ்டனுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வியற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஆன்ம சாந்தியையும், இன்னும் பல வழிகளில் பாதிக்கப்பட்டோருக்கு மன உறுதியையும் இறைவன் அளிப்பாராக என்று இத்தந்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிறன்று வீசிய சூறாவளி மிக அதிக அளவு சக்தி வாய்ந்ததென்றும், இச்சூறாவளியின் பாதை ஆறு மைல் நீளமும் மூன்றேகால் மைல் அகலமும் கொண்டதென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இச்சூறாவளியின் பாதையில் 8000 கட்டிடங்கள் சேதமடைந்தன என்றும், 122 பேர் உயிரிழந்தனர், 750க்கும் அதிகமானோர் காயமுற்றனர், மற்றும் 1500 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
1953ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வீசிய சூறாவளிகளில் 519 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தபடியாக 2011ம் ஆண்டில் இதுவரை வீசிய சூறாவளிகளில் இதுவரை 500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் மேலும் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.