2011-05-25 16:34:19

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 25, 2011. உரோம் நகரில் வெயில் தன் தீவிரத்தைக் காட்டத் துவங்கியுள்ள நிலையில், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வந்து குவியும் உல்லாச மற்றும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியச் சுற்றுலாப்பயணிகளும் பெருமளவில் உரோம் நகருக்கு வருவதை இந்ந்நாட்களில் அதிகம் அதிகமாகக் காணமுடிகிறது. திருத்தந்தை இப்புதனன்று வழங்கிய பொது மறைபோதகத்திற்குச் செவிமடுக்க தூய பேதுரு பேராலய வளாகத்தில் பெருமளவான திருப்பயணிகள் குழுமியிருக்க, அதில் குறிப்பிடத்தகும் அளவில் இந்தியர்களும் இருந்தனர். செபம் குறித்த தன் மறைபோதகத் தொடரில் இவ்வாரம், முதுபெரும் தந்தை யாக்கோபு குறித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
யாபோக்கு ஆற்றங்கரையில் முதுபெரும் தந்தை யாக்கோபு இறைவனோடு போராடியது குறித்து விவிலியம் விவரிப்பதை நோக்கி (தொ.நூ. 32:23-33) இன்று நம் பார்வையைத் திருப்புவோம். சரியாக புரிந்துகொள்ள முடியாத இந்த மோதல், யாக்கோபு தனியாக அதுவும் நிராயுதபாணியாக இருக்கும்போது, இரவில் இடம் பெறுகிறது. இந்த மோதலில் இவரைத் தாக்கியவர் மற்றும் வெற்றி பெற்றவர் குறித்து எதுவும் முதலில் தெளிவாக இல்லை. இம்மோதலில் காயமுற்ற யாக்கோபு, தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக தன் பெயரை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் 'இஸ்ரயேல்' எனும் புதிய பெயரையும் ஆசீரையும் பெறுகிறார். தன்னோடு மோதியவர் கடவுள் என்பதை விடியற்காலையில் தான் யாக்கோபு கண்டுகொள்கிறார். மோதலில் ஏற்பட்ட காயத்துடன் நொண்டிக்கொண்டே ஆற்றின் துறையைக் கடந்தார் யாக்கோபு. திருச்சபையின் ஆன்மீகப் பாரம்பரியமானது, இந்நிகழ்வில் செபத்திற்கான ஓர் அடையாளத்தைக் கண்டுகொள்கிறது. அது என்னவெனில், செபம் என்பது இருளின் காலத்தில் இடம்பெறும் ஒரு விசுவாசம் நிரம்பிய போராட்டம். அது விடாமுயற்சியுடன் தொடர்வதற்கு அழைப்பு விடுப்பதுடன், உள்மன புதுப்பித்தல் மற்றும் இறை ஆசீரால் மகுடம் சூட்டப்படுகிறது. தளர்ந்து போகாத தொடர் முயற்சிகளுக்கு இப்போராட்டம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இருப்பினும், இறைவனின் கருணைக்கும் கொடைக்கும் நம்மைக் கையளிப்பதில் முடிவடைகிறது. தான் இறைவனுடன் மோதிய இடத்திற்கு, 'பெனியேல்' என அதிகாலையில் பெயரிட்டார் யாக்கோபு. பெனியேல் என்பதற்கு 'இறைவனின் முகம்' என்பது பொருள். ஏனெனில், 'நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்' என உரைத்தார் அவர். இறைவனை முகமுகமாய் காண விரும்பும் நம்மை ஆசீர்வதிக்கவும், நம் விசுவாசப் போராட்டத்தில் நமக்கு உதவவும் நம் செபங்களில் இறைவனை நோக்கி வேண்டுவோம். இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த இந்தியத் திருப்பயணிகள் உட்பட அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.