2011-05-21 15:28:47

பெற்றோர்கள் தங்களின் இளமைக் கால படிப்பு கனவை, பிள்ளைகளிடம் திணிப்பதோ, விதைப்பதோ கூடாது.


மே 21, 2011. "பெற்றோர்கள் தங்களின் இளமைக் கால படிப்புக் கனவை, பிள்ளைகளிடம் திணிப்பதோ, விதைப்பதோ கூடாது,'' என, மதுரை டாப்கிட்ஸ் குழந்தைகள் மனநல மருத்துவர் தீப் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில், குழந்தைகளுக்கான கல்வி குறித்து கருத்து வெளியிட்ட குழந்தைகள் மனநல மருத்துவர் தீப், ஆசிரியர்களிடம் நம்பிக்கை வைத்து, பிள்ளைகளை ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியர்களிடம் ஈடுபாடு ஏற்படும் எனவும், குழந்தைகள் வீடு திரும்பியவுடன் பள்ளியில் ஆசிரியர் அடித்தாரா, சக பிள்ளைகள் அடித்தனரா என எதிர்மறையான கேள்விகள் கேட்கக்கூடாது, ஏனெனில் அதுவே, ஆசிரியர்கள் என்றாலே அடிப்பார்கள் என்ற சிந்தனையை மனதில் பதித்து விடும் என்று எச்சரித்தார்.
எச்சூழலிலும் பக்கத்து வீட்டு பிள்ளைகளுடனோ, உடன் பிறந்தவர்களுடனோ படிப்பை, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்ற அறிவுரைகளையும் வழங்கியுள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் தீப், குழந்தைகள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, "டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும்' என்ற எண்ணங்களைத் திணிக்காதீர்கள். உங்களது இளமைக்கால படிப்புக் கனவை, பிள்ளைகள் மீது திணிப்பது நியாயமே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஈடுபாடு, திறமை இருக்கும். அத்திறமையைக் கண்டறிந்து, அதைநோக்கி பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.