2011-05-20 15:44:23

மே 21. வாழ்ந்தவர் வழியில் ....


கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த உலகப் புகழ்பெற்ற சாக்ரடீஸ் என்ற மாமேதையின் மாணவர் பிளேட்டோ. இவர், சாக்ரடீஸ் சொன்ன உண்மைகளை, வகுத்தப் பாதையை உலகுக்கு உணர்த்தியவர். சாக்ரடீஸ் என்ற கதிரொளியைத் தம் எழுத்தால், பேச்சால் பிரதிபலித்தார் பிளேட்டோ. ஏதென்ஸ் நகரில் கி.மு. 427ம் ஆண்டு மே மாதம் 21ந் தேதி இவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. சரியாக 80 ஆண்டுகள் வாழ்ந்த பிளேட்டோ, தம் ஆசிரியர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தவர். ஏதென்ஸ் நகர இளைஞர்களை எல்லாம் சாக்ரடீஸ் தன் சீர்திருத்தக் கருத்துகளால் கெடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுடன் ஏதென்ஸ் நகரம் சாக்ரடீசுக்கு ஹெம்லாக் (Hemlock) என்ற நஞ்சினை அளித்து மிகக் கொடூரமான முறையில் தண்டித்தது. தன் குருவின் மரணத்திற்குப் பின், தம் ஆசிரியர் பணியை நிறைவு செய்ய, தத்துவப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார் பிளேட்டோ. அப்பள்ளியின் மூலமாகத்தான் பிளேட்டோ, சாக்ரடீஸின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்.
பிளேட்டோ சொல்லிச் சென்ற தனிமனித ஒழுக்கம்பற்றிய உண்மை பொன்னே போல் போற்றத்தக்கது. ‘எவன் ஒருவன் தனது வாழ்வில் நியாயத்தை, நடுநிலையைப் பின்பற்றுகிறானோ, அவன் அதிஉன்னதமான மகிழ்ச்சியை அடைகிறான். நடுநிலையிலிருந்து - நியாயத்திலிருந்து விலகிச் செல்பவன் நீங்காதத் துன்பத்தைப் பெறுகிறான். ஆகவே, நியாயம் நன்மையையும், அநியாயம் தீமையையும் அளிக்கும்’ என்பது பிளேட்டோவின் அரியதொரு கூற்று.
பிளேட்டோ படைக்க நினைத்த சமுதாயம், ‘Republic’ என்ற அவரது நூலில் யுடோபியா (Utopia) என்று அழைக்கப்பட்டது. தனி மனிதனின் மகிழ்ச்சிக்காக சமுதாய நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதே இவர் காண விழைந்த யுடோபியன் சமுதாயத்தின் நியதி.
சாக்கிரட்டீசின் சீடராயிருந்த பிளேட்டோவின் புகழ் வாய்ந்த சீடர் அரிஸ்டாட்டில்.
80 ஆண்டுகள் இவ்வுலகில் உயிர்வாழ்ந்த பிளேட்டோ, கி.மு. 347ல் காலமானார்.
இதே மே 21, 1991ம் ஆண்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.