2011-05-20 15:54:32

இரு அருட்சகோதரிகள் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்குகள்


மே 20,2011. இச்சனிக்கிழமையன்று போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் குழந்தை இயேசுவின் மரிய கிளாரா என்ற அருள்சகோதரி அருளாளராக உயர்த்தப்படுவார். புனிதற்படி நிலைகளுக்கானத் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Angelo Amato இந்தப் புனித சடங்கில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார்.
மேலும், பிரேசில் நாட்டு வரலாற்றில் அதிக அளவில் போற்றப்படும் மறைந்த அருள் சகோதரி Dulce Lopes Pontes வருகிற ஞாயிறு, மேமாதம் 22ம் தேதியன்று அருளாளராக உயர்த்தப்படுவார்.
இயேசு கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றி, அருள்சகோதரி Dulce, தன் வாழ்வை ஏழைகளுக்கும், துன்புறும் மக்களுக்கும் முழுவதும் அர்ப்பணித்தார் என்று கர்தினால் Geraldo Majella Agnelo கூறினார்.
ஓய்வுபெற்ற கர்தினால் Agnelo, இஞ்ஞாயிறு நடைபெற இருக்கும் அருளாளர் பட்டமளிப்புத் திருப்பலியை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் பிரதிநிதியாக இருந்து நிறைவேற்றுவார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
1914ம் ஆண்டு பிறந்த அருள்சகோதரி Dulce, ஆறு வயதில் தன் தாயை இழந்தார். இவர் 18ம் வயதில் துறவறச் சபையில் சேர்ந்தார். குழந்தை இயேசுவின் தெரேசா அருள்சகோதரி Dulceக்கு மிகப் பெரும் உந்துசக்தியாக இருந்தார் என்று இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.
அண்மையில் அருளாளராக உயர்த்தப்பட்ட இரண்டாம் ஜான்பால் 1980 மற்றும் 1991 ஆகிய இரு ஆண்டுகள் அருள்சகோதரி Dulceஐ சென்று சந்தித்துள்ளார். மேலும் 1988 ஆம் ஆண்டு அமைதிக்கான நொபெல் விருதுக்கு அருள்சகோதரியின் பெயர் பரிந்துரை செய்யபட்டிருந்தது.1992ம் ஆண்டு இறையடி சேர்ந்த அருள்சகோதரி Dulceயின் பரிந்துரையால், 2001ம் ஆண்டு புதுமை நடந்ததாகவும் அதன் பலனாக இவர் வருகிற ஞாயிறன்று அருளாளராக உயர்த்தப்படுவார் என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.