2011-05-19 15:38:24

மே 20 வாழ்ந்தவர் வழியில்.....


இத்தாலியின் ஜெனோவா துறைமுக நகரில் 1451ல் பிறந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) ஒரு நாடுகாண் கடல் பயணி, வணிகர். இவர் 1492ல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவைச் சென்றடைந்த முதல் ஐரோப்பியர். கொலம்பஸ் ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். ஆனால் இவர் அமெரிக்காவை “புதிய உலகை”க் கண்டுபிடித்தார். ஸ்பெயின் கத்தோலிக்க அரசர்களின் துணை கொண்டு நான்கு கடற்பயணங்களை இவர் மேற்கொண்டார். கொலம்பஸ் தான் சென்ற தீவுகளில் பார்த்த மக்களை "indios" என்று அழைத்தார். இன்டியோஸ் என்ற ஸ்பானிய வார்த்தைக்கு இந்தியர்கள் என்று பொருள். இவரது கண்டுபிடிப்பே புதிய உலகில் ஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்கும், பின்னர் படிப்படியாக ஐரோப்பியரின் காலனி ஆதிக்கத்திற்கும் வழி அமைத்தது. உண்மையில் கொலம்பசுக்கு முன்னர் ஸ்காண்டிநேவிய கடற்பயணிகளாகிய வைக்கிங்கள் (Vikings) என்பவர்கள், வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். ஆனாலும் கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். 1506ம் ஆண்டு மே 20ம் தேதி கொலம்பஸ் இறந்தார். அப்போதுகூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார் என்று சொல்லப்படுகிறது. கொலம்பசின் உடல் சாந்தோ தொமிங்கோவில் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.