2011-05-19 15:32:08

போர்குற்றம் குறித்து விசாரணை தேவை - இந்தியா


மே 19,2011. இலங்கைப்போரின் இறுதி கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மீறல் புகார் தொடர்பான சாட்சிகள் இருந்தால், அது இலங்கை சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதிகட்ட போர் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியான நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்ளிட்ட பலரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
திங்கள்கிழமையன்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நடத்திய பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இருதரப்பு உறவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாய் நாடு திரும்ப விரும்புவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, சுமார் 60 ஆயிரம் அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், நிலைமை சீரடைந்துவிட்ட நிலையில், பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்ப விரும்புவதாகவும் பீரீஸ் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.