2011-05-19 15:33:38

உரோமை கார்மல் சபையின் பாப்பிறை இறையியல் துறைக்கான திருத்தந்தையின் உரை.


மே 19,2011. இறைவனுடன் நெருக்கமாக நடைபயில விரும்புவோருக்கு மட்டுமல்ல, தாங்கள் பெற்ற திருமுழுக்கிற்கான பொறுப்புணர்வுடன் செயல்படும் அனவருக்கும் ஆன்மீகத்தின் பாதையைக் காட்டும் பணியை திருச்சபைத் தொடர்ந்து ஆற்றி வருவதாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காலணிகள் அணியா கார்மல் சபையினரால் உரோம் நகரில் தெரசியானம் எனும் பெயரில் பாப்பிறை இறையியல் கல்வி நிறுவனம் துவக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்நிறுவனத்தின் பேராசிரியர்கள், மாணவப் பிரதிநிதிகள் என ஏறத்தாழ 115 பேரை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மனித இன ஆராய்ச்சியின் பின்னணியில் கிறிஸ்தவ ஆன்மீகம் குறித்த கல்வி, இன்றையச் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என கூறினார். கார்மல் சபையினரின் முக்கிய புனிதையாகிய அவிலா தெரசாவின் எடுத்துக்காட்டுக்களையும் மேற்கோள்காட்டிப் பேசிய திருத்தந்தை, இறைஅன்பிற்கு பாராமுகமாய் நம்மால் எங்கனம் இருக்க முடியும் என அப்புனிதை இன்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார் எனவும் தெரிவித்தார்.
கிறிஸ்துவின் மறையுண்மைகள் குறித்தான அறிவை மேலும் பெருக்கிக்கொள்ள வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை இக்கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளை, நமக்காக உயிரைக் கையளித்த இயேசுவின் அன்பு குறித்த சிந்தனை இந்த இறையியல் கல்வி காலத்தில் மாணவர்களுக்குள் மேலோங்கி நிற்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.