2011-05-18 16:06:59

ஹெயிட்டி மக்கள் குறித்த அமெரிக்க அரசின் முடிவுக்கு அமெரிக்க ஆயர் பேரவையின் வரவேற்பு


மே 18,2011. ஹெயிட்டியின் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தஞ்சம் புகுந்த ஹெயிட்டி மக்களின் தற்காலிகக் குடியிருப்பு நிலையை நீட்டிக்க அமெரிக்க அரசு அண்மையில் எடுத்துள்ள முடிவை அமெரிக்க ஆயர் பேரவை மகிழ்வுடன் வரவேற்றுள்ளது.
அதே நேரத்தில் தஞ்சம் புகுந்த ஹெயிட்டி மக்களில் குற்றம் புரிந்தவர்கள் என்ற பின்னணி கொண்டவர்களை மீண்டும் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் முடிவை அமெரிக்க அரசு எடுத்திருப்பதை அமெரிக்க ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.
2010ம் ஆண்டு சனவரியில் ஹெயிட்டியைத் தாக்கிய நிலநடுக்கத்தின் விளைவுகளை அந்நாட்டு மக்கள் இன்னும் அனுபவித்து வரும் வேளையில், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றும் எண்ணத்தில் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அமெரிக்க அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பது அந்நாட்டிற்கு செய்யப்படும் மிகப் பெரும் உதவி என்று அமெரிக்க ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான பேராயர் Jose Gomez கூறினார்.ஹெயிட்டியில் சட்டம் ஒழுங்கு இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் குற்றப்பின்னணி உள்ளவர்களை அந்நாட்டிற்கு மீண்டும் அனுப்புவது என்ற அமெரிக்க அரசின் முடிவு கவலை தருகிறதென்று கத்தோலிக்க நிவாரணப் பணிகளுக்குப் பொறுப்பான ஆயர் Gerald Kicanas கூறினார்.







All the contents on this site are copyrighted ©.