2011-05-18 15:34:08

மே 19, 2011.. – வாழ்ந்தவர் வழியில்........,


யோஃகான் காட்லீப் ஃபிக்டெ, (Johann Gottlieb Fichte) ஒரு ஜெர்மன் நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் ரம்மெனௌ (Rammenau) எனும் ஊரில் 1762ம் ஆண்டு மே 19ந்தேதி பிறந்தார். இவர் ஜெர்மன் நாட்டுணர்வு அதிகரிக்கவும், அந்நாட்டு மெய்யியலில் புதுப்போக்கு உருவாகவும் வித்திட்டவர் ஆவார். இவர் ஜெர்மன் நாட்டின் கருத்தியம் (German Idealism) என்னும் மெய்யியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். ஜெர்மன் கருத்தியம் என்னும் மெய்யியல் இயக்கம் இம்மானுவேல் காண்ட் என்பவர் துவக்கி வைத்த கொள்கைகளில் இருந்து எழுந்தது. இம்மானுவேல் காண்ட் எழுதிய கருத்துக்களைப் படித்தபின் ஃபிக்டெ, மெய்யியல் துறையில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார். இவர் யேனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவருடைய தன்னுணர்வு நிலை பற்றிய நுட்பமான கருத்துக்களுக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவருடைய படைப்புகளைப் புரிந்து கொள்வது கடினம் என்று பலரும் நினைக்கின்றனர். இவர் கடவுள் மறுப்புக் கொள்கையர் என்று குற்றம் சாட்டப்பட்டு பேராசிரியர் பதவியை இழந்தார். பிறகு பெர்லின் நகருக்கு இடம்பெயர்ந்தார். நெப்போலியனின் அடியில் இருந்த பெர்லினில் இவர் எழுதிய ‘ஜெர்மன் நாட்டினருக்கு சொற்பொழிவு’ என்னும் நூல் புகழ் மிக்கது.
1796 ஆம் ஆண்டில் வெளியாகிய ‘இயல்பான வலதுசாரிக் கொள்கைகளுக்கான அடித்தளங்கள்’ (Foundations of Natural Right) எனும் இவருடைய நூலில் தன்னுணர்வு நிலை பற்றியும், சமூக நிகழ்வியக்கம் பற்றியும் எழுதியுள்ளார். ஒவ்வொருவரின் தன்னுணர்வு நிலைக்கு மற்ற அறிவுடையவர்கள் இருப்பது மிகத் தேவையானது என்று கூறுகின்றார். இப்படி மற்ற அறிவுடைவர்கள் இருப்பதால் அவர்களுடைய தாக்கத்தால் தான் தன் அறிவுநிலையை உணர முடிகின்றது என்று உரைக்கிறார். இவர் 1814ம் ஆண்டு ஜனவரி 27ல் பெர்லினில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.