2011-05-17 15:48:19

விவிலியத்
தேடல்


RealAudioMP3
திருப்பாடல் 36
தாவீதும் இன்னும் சிலரும் வெவ்வேறு காலங்களில், சூழல்களில், பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கிய பாடல்களின் தொகுப்பு திருப்பாடல்கள் நூல் என்பதை நாம் அறிவோம். இவ்வாசிரியர்கள் இப்பாடல்களை உருவாக்கியபோது தங்கள் பாடல்கள் ஒரு நூலாகத் தொகுக்கப்படும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. அவர்கள் உருவாக்கிய 150 பாடல்களையும் பல ஆண்டுகள் கழித்து தொகுத்தவர்கள், அவற்றை ஓரளவு வரிசைப்படுத்தியுள்ளனர். இன்று பெரும்பாலான விவிலியப் பதிப்புகளில் 150௦ திருப்பாடல்கள் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1 முதல் 41 வரையிலான திருப்பாடல்கள் முதல் பாகம்.
42 முதல் 72 வரையிலான திருப்பாடல்கள் இரண்டாம் பாகம்.
73 முதல் 89 வரையிலான திருப்பாடல்கள் மூன்றாம் பாகம்.
90 முதல் 106 வரையிலான திருப்பாடல்கள் நான்காம் பாகம்.
107 முதல் 150 வரையிலான திருப்பாடல்கள் ஐந்தாம் பாகம்.
சவுல் அரசனுடன் தாவீது மேற்கொண்ட போராட்டம் திருப்பாடல்கள் நூல் முதல் பகுதியின் மையமான ஒரு கருத்து என்று விவிலிய ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை எடுத்துரைக்கும் திருப்பாடல் 36ஐ நமது இன்றையத் தேடலில் சிந்திப்போம்.

ஆடுகளை மேய்த்துக் கொண்டு ஆனந்தமாய்ச் சுற்றித் திரிந்த சிறுவன் தாவீது ஆண்டவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, இறைவாக்கினர் சாமுவேலால் திருப்பொழிவு செய்யப்படுகிறார் (1 சாமுவேல் 16). சிறுவன் தாவீதை அரண்மனையில் ஆர்வமாய் வரவேற்ற அரசன் சவுல், படிப்படியாக தாவீதின் மீது பொறாமையும், வெறுப்பும் கொண்டு, அவரைக் கொன்றுவிடும் அளவு வெறி கொண்டு அலைகிறார். சக்தி வாய்ந்த அரசன் தனி ஒரு மனிதரைக் கொல்லத் துடிக்கும்போது, அந்தத் தனி மனிதனுக்கு ஒரே புகலிடம் கடவுள்தானே. சவுல் அரசனும் அவரைச் சார்ந்தவர்களும் தன்னை அழிக்க மேற்கொண்ட முயற்சிகள், அந்த முயற்சிகளை எல்லாம் அழித்து, தன்னைக் காத்து வரும் இறைவனின் கருணை என்ற இவ்விரு எண்ணங்களும் முதல் 41 திருப்பாடல்களில் மாறி மாறி ஒலிக்கின்றன. 36ம் திருப்பாடலிலும் மானிடரின் தீய குணம் முதல் பகுதியிலும் கடவுளின் கருணை இரண்டாம் பகுதியிலும் ஒலிக்கிறது.

முதல் பகுதியில் மானிடரின் தீய குணம் பற்றி எளிய வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார் தாவீது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பாடல் ஆசிரியர் சொன்ன இந்த வரிகள் நாம் வாழும் 2011ம் ஆண்டில் உள்ளவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைப் போல் ஒலிக்கின்றன. மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ நம் மனதில் நுழைவதற்கு கண்கள், காதுகள் என்ற இரு வாசல்கள் நமக்கு உள்ளன. அதேபோல், நன்மையோ தீமையோ நம்மிடமிருந்து வெளியே செல்வதற்கும் நமது வாய் என்ற ஒரு வாசல் உள்ளது. இந்த வாசல்களைக் காக்கும் காவலாளி நமது மனம் அல்லது மனசாட்சி. திருப்பாடலின் ஆசிரியர் இந்தப் பாடலின் முதல் நான்கு திருவசனங்களில் இந்த மூன்று வாசல்களைப் பற்றித் தெளிவாகப் பேசுகிறார். அப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள வரிகளைக் கேட்போம்.

திருப்பாடல் 36 1-4
பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது: அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர். அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை: நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர். படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்: தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.

நம் ஒவ்வொருவரையும் நன்மைக்கும் தீமைக்கும் வழிநடத்தும் கண், காது, வாய் என்ற இந்த மூன்று வாயில்களைப் பற்றி நினைக்கும்போது, மகாத்மா காந்தி வைத்திருந்ததாகச் சொல்லப்படும் குரங்கு பொம்மைகளை என் மனம் நினைக்கிறது.

அறிவுள்ள குரங்குகள் (The Wise Monkeys) என்ற இந்த அடையாளம் ஜப்பானில் 17ம் நூற்றாண்டு கட்டப்பட்ட ஒரு கோவிலில் காணப்படுகிறது. Confucius கற்றுத் தந்த பாடங்களான தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பேசாதே என்ற மூன்று குரங்களைப் பற்றி நமக்குத் தெரியும். நான்காவது குரங்கு தீயவற்றைச் செய்யாதே என்பதைக் கூறும் வண்ணம் தன் கைகளை மார்போடு கட்டியவண்ணம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குரங்குகள் சொல்லித்தரும் இந்தப் பாடங்களை நாம் பல வேளைகளில் மறந்து விடுவதால், பிரச்சனைகள் மலைபோல் குவிந்து விடுகின்றன. இந்தப் பாடங்களை மறந்து விட்டவர்களைப் பற்றியே திருப்பாடல் 36ன் முதல் பகுதியில் ஆசிரியர் சொல்கிறார்.

தீமை என்பது ஒரே நாளில் ஒருவரது வாழ்வில் குடிகொள்வதில்லை. சிறிது, சிறிதாக, துளித் துளியாக இறங்கி நம் மனதை தீய எண்ணங்கள் நிறைக்கின்றன. துளித் துளியாக நீர் இறங்கினால், ஓர் இரும்பு கவசமும் துருப்பிடித்து தூளாகிப் போகும்... இல்லையா? அதுபோலவே, தீய எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊறிப்போகும் உள்ளமும் உருக்குலைந்து போகும்.

இதற்கு ஓர் எடுத்துகாட்டு - தவளைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை. கொதிக்கும் நீர் உள்ள ஒரு பாத்திரத்தில் தவளை ஒன்றைப் போட்டால் என்ன ஆகும்? அது உடனே அந்த நீரை விட்டு எகிறி வெளியே குதித்துவிடும். குளிர்ந்த நீருள்ள மற்றொரு பாத்திரத்தில் ஒரு தவளையைப் போட்டால், அது அங்கு மகிழ்ச்சியாய் நீந்தி வரும். அந்தப் பாத்திரத்தை மெதுவாக, மிகவும் மெதுவாக சூடாக்கினால், நீரின் வெப்ப நிலை ஒவ்வொரு புள்ளியாக உயரும். பாத்திரத்தில் உள்ள தவளை அந்த வெப்பத்திற்குக் கொஞ்சம், கொஞ்சமாகப் பழகிவிடும். அந்தப் பாத்திரம் நல்ல வெப்பத்தை அடையும்போது, அதில் இருந்தத் தவளை வெளியே குதிக்கும் எண்ணத்தை மறந்து, குதிக்கும் திறனை இழந்து அந்த வெப்பத்திலேயே வெந்து சாகும். தீய எண்ணங்கள் மனதில் நுழையும்போது முதலில் நம்மில் எதிர்ப்பு இருக்கும். ஆனால், அதே எண்ணங்களை அடிக்கடி கேட்டு, பார்த்து, பேசி வரும்போது அவைகளே பழக்கமாகிவிடும். பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது...படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர். என்ற வரிகள் திருப்பாடல் ஆசிரியர் நமக்குத் தரும் எச்சரிக்கை!

இவ்விதம் நம்மைத் தீய வழிகளில் ஊறிப்போகச் செய்வதற்கு, நாம் தொடர்ந்து குற்றங்கள் செய்வதற்கு ஒரு முக்கிய காரணமாய் திருப்பாடல் ஆசிரியர் சொல்லும் மற்றொரு வரி கூரிய அம்பென நம் நெஞ்சில் பாய்கிறது: அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர். (திருப்பாடல் 36: 2)

இந்த வரியை வாசித்தபோது என் மனம் அரசியல் தலைவர்களைத்தான் அதிகம் எண்ணிப்பார்த்தது. கறுப்புப்பணம் என்ற சிந்தனையை அடிக்கடி நாம் பேசி வந்திருக்கிறோம். தவறான வழிகளில் செல்வம் சேர்த்துள்ள குற்றத்தில் இந்தியாவின் இன்றையத் தலைவர்களில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் பெரும் குற்றவாளிகள். இந்தியாவில் குற்றங்கள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணம் நீதி மன்றங்களின் செயலிழந்த நிலை. இந்தியாவில் ஒருவரைக் குற்றவாளி என்று தீர்மானிக்க குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகள் ஆகலாம். இந்தக் குற்றவாளி உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு தலைவர் என்றால் 30 அல்லது 40 ஆண்டுகள் ஆகலாம். 20,000க்கும் அதிகமானோரைக் கொன்ற போபால் நச்சு வாயு விபத்து நடந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு, 8 பேரைக் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்து, அவர்களுக்கு நீதி மன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குற்றவாளிகள் பலர் வெட்கத்தில் தலை குனிந்து நிற்பதற்குப் பதில், மக்களின் வெறுப்புக்கு உள்ளாவதற்குப் பதில், மேடைகளிலும், அரியணைகளிலும் அமர்ந்திருப்பதையும், அவர்களைச் சுற்றி பளிச்சிடும் காமிராக்களைப் பார்த்து கையசைப்பதையும் பார்க்கும்போது, எனக்குள் ஆழமான பயம் உருவாகிறது. இந்தக் காட்சிகள் இன்னும் பலரை தவறான வழிகளுக்கு ஈர்த்துவிடுமோ என்ற பயம் எனக்கு.

இதே பயம் திருப்பாடல் ஆசிரியரையும் உலுக்கி எடுத்திருக்க வேண்டும். அவரது உள்ளத்தையும் வேதனையில் கசக்கிப் பிழிந்திருக்க வேண்டும். ஆனால், திருப்பாடலின் ஆசிரியர் இந்த வேதனையுடன், பயத்துடன் இந்தத் திருப்பாடலை நிறைவு செய்யவில்லை. திருவசனங்கள் 5 முதல் 12 வரையில் கடவுளின் கருணையைப் பாடி முடிக்கிறார். கவிதை நயத்துடன் ஒலிக்கும் அந்த வரிகளுடன் நாமும் இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்:

கடவுளின் கருணைஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு: முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை. ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது: உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை: மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே: கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்: உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது: உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம். உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்! பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்! தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர், அவர்கள் நசுக்கப்பட்டனர்: அவர்களால் எழவே இயலாது. (திருப்பாடல் 36: 5-12)







All the contents on this site are copyrighted ©.