2011-05-17 15:48:06

மே 18, வாழ்ந்தவர் வழியில்...


கணிதம், வானியல், மெய்யியல், கவிதைகள் என்று பல துறைகளிலும் தன் தனிப்பட்ட முத்திரையைப் பதித்தவர் ஓமர் கய்யாம். இவர் 1048ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பாரசீக நாட்டின் நிஷாப்பூர் என்ற இடத்தில் பிறந்தார்.
கணிதத்தில் அல்ஜீப்ரா, ஜியோமிதி இவ்விரண்டிலும் தன் அறிவுத் திறனை வெளிப்படுத்தினார். வானியலில் திறமை மிக்க ஓமர் கய்யாம், நாள்காட்டியில் உருவாக்கிய மாற்றங்கள் இன்னும் ஈரான் நாட்டில் கடைபிடிக்கப்படுகின்றன.
ஓமர் கய்யாம் கவிதைகள் மிகவும் புகழ் பெற்றவை. இவரது கவிதைகளை ஆங்கில உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் Thomas Hyde மற்றும் Edward FitzGerald என்ற இரு அறிஞர்கள். ஓமர் கய்யாம் 1000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. இவரது கவிதைகளைப் புரிந்து கொள்வதில் இரு வேறு துருவங்களைப் போல் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இவர் கடவுள் நம்பிக்கையற்றவர் என்றும், இவ்வுலகமே உண்மை, மறு உலகம் இல்லை என்று இவர் சொல்வதாகவும் ஒரு கண்ணோட்டம் உள்ளது. வேறொரு கண்ணோட்டத்தின்படி, இவர் மிகவும் ஆழ்ந்த நிலையில் கடவுளுடன் இணைந்தவராக இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
1970ம் ஆண்டு நிலவில் உள்ள ஒரு பள்ளத்திற்கு ஓமர் கய்யாம் என்ற பெயர் வழங்கப்பட்டது. அதேபோல், 1980ம் ஆண்டு சோவியத் விண்வெளி வீரர் ஒருவர் கண்டுபிடித்த ஒரு சிறு கோளுக்கு 3095 ஓமர் கய்யாம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
நொபெல் பரிசு பெற்றவரும், பிரித்தானிய கணித மேதையுமான Bertrand Russell 1872ம் ஆண்டிலும், அண்மையில் அருளாளராக உயர்த்தப்பட்ட இரண்டாம் ஜான் பால் 1920ம் ஆண்டிலும் மே மாதத்தின் இதே 18ம் தேதி பிறந்த இரு புகழ்பெற்ற மனிதர்கள்.







All the contents on this site are copyrighted ©.