2011-05-16 16:03:41

மே 17 வாழ்ந்தவர் வழியில் .....


எட்வர்ட் அந்தோணி ஜென்னர் (Edward Anthony Jenner) ஓர் ஆங்கிலேய அறிவியலாளரும் மருத்துவரும் ஆவார். 1749ம் ஆண்டு மே 17ம் தேதி பிறந்த இவர், இளவயது முதற்கொண்டு இயற்கை குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். இவர், பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் முன்னோடியாக விளங்குகிறார். இவரது ஆராய்ச்சிகள் இந்நோயிலிருந்து அதிகமான மக்களைக் காப்பாற்றி இருக்கின்றன. இதனால் இவர் சிலநேரங்களில், "நோய் எதிர்ப்புச் சக்தியின் தந்தை" எனவும் அறியப்படுகிறார். ஜென்னர் 1823ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி காலமானார். பெரியம்மை நோய் ஏறக்குறைய கி.மு. பத்தாயிரம் ஆண்டுவாக்கில் மனிதர்களில் பரவத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. எகிப்தின் பாரவோன் மன்னன் 5ம் Ramses ன் பதப்படுத்தப்பட்ட உடலில்தான் இந்நோய்க் கொப்பளங்கள் இருந்தது முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 18ம் நூற்றாண்டு முடிவடையும் கட்டத்தில் பெரியம்மையினால் சுமார் நான்கு இலட்சம் ஐரோப்பியர்கள் இறந்துள்ளனர். ஐரோப்பியர்கள் கண்பார்வையை இழப்பதற்கு பெரியம்மை மூன்றாவது காரணமாக இருந்திருக்கிறது. இந்நோயால் தாக்கப்பட்ட சிறாரில் 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர் இறந்தனர். 20ம் நூற்றாண்டிலும் பெரியம்மையால் 30 கோடி முதல் 50 கோடிப் பேர்வரை இறந்தனர். WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி 1967ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் இதனால் தாக்கப்பட்டனர், இவர்களில் 20 இலட்சம் பேர் அவ்வாண்டில் இறந்தனர். 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பெரியம்மை தடுப்பூசி நடவடிக்கைகள் உலகெங்கும் பெருமளவில் எடுக்கப்பட்டதன் பயனாக 1979ல் பெரியம்மை உலகில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக WHO நிறுவனம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.