2011-05-16 15:59:26

நல்மேய்ப்பர்களுக்காக செபிக்க அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை


மே 16, 2011. உலகின் பல்வேறு குரல்களுக்கிடையே இறைவனின் குரல் காணாமற்போகும் அபாயம் இருப்பதால், ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் இறையழைத்தலை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறையழைத்தலுக்கான உலகச் செப நாளான இஞ்ஞாயிறன்று உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இயேசுவை நல்லாயனாகக் காட்டும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம், நல்லாயனைப் பின்பற்றும் ஆடுகளின் பண்புகளாக செவிமடுத்தலையும், பின்பற்றுவதையும் காட்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
விசுவாசம் பிறப்பெடுத்து வளரும் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து, இறைவனால் வழிநடத்தப்பட்டு, அவர் படிப்பினைகளின்படி தினசரி வாழ்வை வாழ்ந்து காட்டவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, மனிதர்களுக்கு எப்போதும் இறைவனின் தேவை உள்ளது என்பதால், அவ்விறைவனை திருவருட்சாதனங்களில் கண்டுகொள்ள நம்மை வழிநடத்திச் செல்லும் நல் மேய்ப்பர்களின் தேவையும் எப்போதும் உள்ளது என்றார்.
இறையழைத்தலுக்கான இந்தச் செப நாளில், அனைத்து மேய்ப்பர்களுக்காகவும், குறிப்பாக திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் பங்குகுருக்களுக்காகச் செபிப்பதுடன், இறையழைத்தல்கள் அதிகரிக்க செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.