2011-05-16 16:00:36

அனைத்து ஆயர் பேரவைகளுக்குமான விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தின் வழிகாட்டுதல் ஏடு


மே 16, 2011. சிறார் மீதான குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகள் எவ்விதம் அணுகப்பட வேண்டும் என்பது குறித்து ஒவ்வோர் ஆயர் பேரவையும் வழிகாட்டுதல் ஏடு ஒன்றை தயாரிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அனைத்து ஆயர் பேரவைகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடப் பேராயம்.
கடந்த ஆண்டு, திருத்தந்தையின் ஒப்புதலுடன் கூடிய புதிய விதிகளுடன் விசுவாசக்கோட்பாட்டு பேராயத்தால் தயாரிக்கப்பட்ட ஏட்டுடன் அனுப்பப்பட்டுள்ள இப்பேராயத்தலைவர் கர்தினால் வில்லியம் லேவாடாவின் கடிதம், 2012ம் ஆண்டு மே மாதத்திற்குள் புதிய விதிமுறைகளுடன் கூடிய சட்ட விதி ஒவ்வோர் ஆயர் பேரவையாலும் உருவாக்கப்படவேண்டும் என்றும் அதன் ஒரு பிரதி உரோமையிலுள்ள இப்பேராயத்தின் தலைமையகத்திற்கு அனுப்பப்படவேண்டும் எனவும் தெரிவிக்கிறது.
குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகள் குறித்த கடுமையான புதிய விதிகளை வரையறுக்கும் ஏட்டை, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், ஆயர் பேரவைகளுக்கு அனுப்பியுள்ள போதிலும், அந்தந்த நாடுகளின் சூழல்களுக்கு ஏற்ப புதிய விதிமுறைகளை உருவாக்கி இணைக்குமாறும் விண்ணப்பித்துள்ளது.
தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புக்கவனம், குற்றம் நேரா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள், குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சூழல்களை உருவாக்குதல், குருக்களை உருவாக்கும் பயிற்சிகளில் சிறப்புக் கவனம் செலுத்துதல், அநீதியான முறையில் குற்றம் சாட்டப்படும் குருக்களுக்கு உதவுதல், அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கு இயைந்த வகையில் குற்றங்கள் குறித்து காவல்துறைக்கு அறிவித்தல் போன்றவைகளுடன் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பேராயம் தயாரித்து, திருத்தந்தையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இவ்வேடு.








All the contents on this site are copyrighted ©.