2011-05-14 16:42:59

திருத்தந்தை: நற்செய்தி அறிவிப்பு எதிர்பார்க்கும் அன்பும் சாட்சியமும்


மே 14,2011. வளங்களும் செல்வமும் இருந்தும் நிச்சயமற்ற ஒரு வருங்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் நாடுகளிலும், உலகமயமாக்கல் கொள்கையால் பெரும்பாலும் ஏழைகளின் எண்ணிக்கையே அதிகமாகிவரும் நாடுகளிலும் புது நம்பிக்கைகளை விதைத்து, கிறிஸ்துவின் நீதி, அமைதி, சுதந்திரம் மற்றும் அன்பின் அரசை அறிவிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மறைப்பணிக்கான பாப்பிறைக் கழகத்தின் அங்கத்தினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அனைத்து விதமான அடிமைத்தளைகளிலிருந்தும் மக்களை விடுவித்து உண்மையானச் சுதந்திரம் நோக்கி வழிநடத்திச்செல்லும் நோக்கில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வமுடன் கிறிஸ்தவர்கள் நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட வெண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இறைவார்த்தையே நமக்கு மீட்பளிக்கும் உண்மை என்ற விசுவாச உறுதிப்பாடு நம் வாழ்வில் ஆழமாக வேர் விடும்போதுதான் அதனை அறிவிப்பதில் கிட்டும் அழகையும் இனிய உணர்வையும் நாம் பெறமுடியும் என மேலும் கூறினார் பாப்பிறை.
நற்செய்தி அறிவிப்பதிலிருந்து எவருக்கும் விலக்கு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நாம் எந்தப் பணியை மேற்கொண்டாலும் அதன் வழி நற்செய்தியை அறிவிக்க முடியும் என்றார்.
நற்செய்தி அறிவிப்பு என்பது மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்ல, அது நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது, அது அன்புடன் சாட்சிய வாழ்வையும் எதிர்பார்க்கிறது, அவ்வன்பு மறைசாட்சிய வாழ்வுவரை நம்மை இட்டுச்செல்லக்கூடும் எனவும் உரையாற்றினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.