2011-05-13 15:28:44

இஸ்பெயின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை தந்தி மூலம் அனுப்பிய அனுதாபச் செய்தி


மே 13,2011. இஸ்பெயின் நாட்டின் லோர்கா எனும் நகரில் இப்புதன் மாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த நிலநடுக்கத்தையொட்டி, திருத்தந்தையின் அனுதாபங்களையும், செபங்களையும் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே CARTAJENA ஆயர் ஹோசே மானுவேலுக்கு ஒரு தந்தியின் மூலம் இவ்வியாழனன்று அனுப்பியுள்ளார்.
இவ்வியற்கைப் பேரிடரால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் தன் செபங்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அங்கு பணிகளை மேற்கொண்டுள்ள பலருக்கும் தன் நன்றியையும், செபங்களையும் கூறியுள்ளார்.
இப்புதன் மாலை 5.2 ரிக்டர் அளவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 பேர் காயமடைந்துள்ளனர். லோர்கா நகரில் 20000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.இஸ்பெயின் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இத்தனை பெரிய பாதிப்புக்களை உருவாக்கிய நில நடுக்கம் ஏற்பட்டதில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.