2011-05-12 15:34:19

பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் அதிகத் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர் - பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தானா


மே 12,2011. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்களின் வாழ்வு, முக்கியமாக, உழைக்கும் மக்களின் வாழ்வு, ஒவ்வொரு நாளும் அதிகத் துன்பங்களுக்கு உள்ளாகிறதென்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
சிறுபான்மையினராய் இருக்கும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினரான இஸ்லாமியரின் சந்தேகத்திற்கு நாளும் ஆளாவதால், ஒவ்வொரு நாளும் பயத்துடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர் என்று லாகூரின் ஒய்வு பெற்ற பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தானா ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு இரு வாரங்கள் கழிந்தும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்நேரமும் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற பயம் அவர்களைச் சூழ்ந்துள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்தப் பதட்டமானச் சூழலில் கிறிஸ்தவப் பள்ளிகள் நம்பிக்கை ஒளியை வழங்கி வருகின்றன என்றும், கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் பெரும்பான்மை மாணவ மாணவியர் இஸ்லாமியராக இருப்பதால், அங்கு வழங்கப்படும் நல்ல கல்வித்தரம் கிறிஸ்தவர்கள் மீது மதிப்பை உருவாக்கி வருவதைக் காணலாம் என்றும் பேராயர் சல்தானா சுட்டிக் காட்டினார்.இறுக்கமான இச்சூழலிலும் பாகிஸ்தான் கத்தோலிக்கர்கள் திருப்பலிகளில் பெருமளவில் பங்கு பெறுவதைக் காணும்போது, நம்பிக்கை கூடுகிறதென்று பேராயர் வலியுறுத்திக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.