2011-05-12 15:34:04

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் பகுதிகளை, திருத்தந்தையின் சார்பில் பார்வையிடச் செல்லும் கர்தினால் Robert Sarah


மே 12,2011. ஜப்பானில் இவ்வாண்டு மார்ச் மாதம் 11ம் தேதி இடம்பெற்ற நிலநடுக்கத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை, திருத்தந்தையின் சார்பில் பார்வையிடச் செல்கிறார் கர்தினால் Robert Sarah.
இவ்வெள்ளி முதல் வரும் திங்கள் வரை நான்கு நாட்கள் ஜப்பானில் பயணம் மேற்கொள்ளும் திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்கான 'Cor Unum' அமைப்பின் தலைவர் கர்தினால் Sarah நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அவர்களிடையே பணிபுரியும் குழுக்களை நேரடியாகச் சந்தித்து, திருத்தந்தையின் ஆறுதலையும், ஊக்கத்தையும் வழங்குவார் என திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
நிலநடுக்கத்தின் விளைவாக உறைவிடங்களை இழந்து, தலத் திருச்சபையின் உதவி மையங்களில் வாழ்ந்து வரும் மக்களை இச்சனிக்கிழமையன்று சந்திக்கும் கர்தினால், பின்னர் தலை நகர் டோக்கியோ சென்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அருளாளராக அறிவிக்கப்பட்டதற்கான நன்றித் திருப்பலியை ஜப்பான் ஆயர்களுடன் இணைந்து நிறைவேற்றுவார்.இப்பேரிடரின் மையப் பகுதியான Sendai நகர் சென்று, அங்குள்ள பேராலயத்தில் ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்துவார். இம்மாதம் 16ம் தேதி, திங்களன்று உதவி மையங்களைப் பார்வையிடுவதுடன், பிறரன்பு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வார் கர்தினால் Sarah.







All the contents on this site are copyrighted ©.