2011-05-12 15:33:52

B'nai B'rith International என்ற ஓர் அகில உலக யூத அமைப்பினருடன் திருத்தந்தை சந்திப்பு


மே 12,2011. யூதர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இறைவனின் திருவுளப்படி உலகை முன்னேற்றும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட முடியும் என்று திருத்தந்தை கூறினார்.
மனித நலம், மனித உரிமைகள் ஆகியவற்றை நிலைநிறுத்த உழைத்து வரும் B'nai B'rith International என்ற ஓர் அகில உலக யூத அமைப்பின் உறுப்பினர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் உருவான கத்தோலிக்க-யூத உரையாடல் குழு இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பாரிஸ் நகரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் B'nai B'rith International அமைப்பின் உறுப்பினர்கள் ஆர்வமாய் பங்கேற்றதற்கு தன் நன்றியைக் கூறினார் திருத்தந்தை.
மனித சமுதாயத்தின் துயர் துடைக்கும் பணிகளிலும், பிறரன்புச் சேவைகளிலும் அதிகமாய் ஈடுபடும் கிறிஸ்தவ மற்றும் யூத அமைப்புக்கள், கடவுளின் சாயலாக உருவான மனிதர்களின் அடிப்படை மதிப்பை நிலை நிறுத்துவதில் இன்னும் ஒருமித்த கருத்துடன் உழைப்பது அவசியம் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார் பாப்பிறை.மனித சமுதாயம் கண்டுவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இவ்வுலக அளவிலேயே தீர்வுகளைக் காண விழையும் நமது இன்றைய சமுதாயத்தின் பார்வையை, கண்ணுக்குப் புலப்படாத இறைவனை நோக்கித் திருப்பும் முயற்சிகளில் கிறிஸ்தவர்களும், யூதர்களும் இணைவது மிக அவசியமான ஒரு பணி என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.