2011-05-11 16:41:07

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 11, 2011. வழக்கமாக புதன் கிழமை என்றால் உரோம் நகரின் புனித பேதுரு பேராலய வளாகம் நிரம்பி வழியும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். இவ்வாரமும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்புதனன்றும் புனித பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெற்ற திருத்தந்தையின் பொதுமறைபோதகத்தில் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர். உரோம் நகரின் தற்போதைய காலநிலை, கோடை காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்வது போல், சூரிய ஒளியின் வெப்பத் தாக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், திருத்தந்தையின் போதகத்திற்கு செவிமடுக்க, திருப்பயணிகள் அந்த வளாகத்தில் அமைதியாகக் கூடியிருந்ததைக் காணமுடிந்தது. உரோம் நேரம் 10.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் பகல் 2 மணிக்கு தன் புதன் பொதுமறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
செபம் என்பது எவ்வாறு உலகளாவிய மனித அனுபவத்தின் பகுதியாக உள்ளது என கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைபோதகத்தில் ஏற்கனவே கண்டோம். மதச்சார்பின்மைக் கோட்பாட்டாலும், பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்ற கோட்பாட்டாலும், கடவுளே இல்லை என்பது போல் தோன்றும் நிலைகளாலும் குறியிடப்பட்டிருக்கும் இன்றையக் காலக்கட்டமானது, முற்றிலும் அனுபவம் மற்றும் பொருள் சார்ந்த வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் குறைபாடுகள் குறித்து அறிந்து கொண்டதன் அடையாளத்தையும், புதுப்பிக்கப்பட்ட மத உணர்வுகளின் அடையாளத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது. இறைச்சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் இதயத்தில் இறைவனுக்கான ஏக்கம் குடிகொண்டுள்ளது. செபத்தின் மூலம் தன்னால் இறைவனுடன் உரையாட முடியும் என்பதை மனிதனும் ஏதாவது ஒரு வழியில் அறிந்தே வைத்துள்ளான். இறைவனுக்கான ஏக்கத்தின் வெளிப்பாடே செபம்.
அந்த ஏக்கம் இறைவனின் கொடையாகும். செபம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக, இதயம் சார்ந்த ஒன்றாகும். நம் பாவநிலைகளையும், குறைபாடுகளையும் மாற்றியமைப்பதற்கு இறைவனின் உதவியையே சார்ந்திருக்கிறோம் என்பதையும், இறை அழைப்பையும் நாம் இதயத்திலேயே கண்டுகொள்கிறோம். இத்தகையத் தேவையை நாம் ஏற்பதையும், நட்புறவுடன் கூடிய மறைவடக்கமான சந்திப்பில் இறைவன் தன்னையே கொடையாகக் கையளிப்பதற்கு நம்மையேத் திறப்பதையும், செபத்தின்போது நாம் முழந்தாள்படியிடுவது வெளிப்படுத்தி நிற்கிறது. அடிக்கடிச் செபிக்கவும், நம் இதயங்களின் அமைதியில் இறைகுரலுக்குச் செவிமடுக்கவும், எல்லையற்ற அன்பாயிருக்கும் இயேசு கிறிஸ்துவில் தன்னையே வெளிப்படுத்திய இறைவனுடனான ஐக்கியத்தில் வளரவும் உறுதியாக தீர்மானிப்போம். இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும், குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜப்பான், கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.