2011-05-10 16:05:36

விவிலியத்
தேடல்


திருப்பாடல் 34
பிறர் செய்த உதவிக்கு நன்றி என்று சொல்லி நமது நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறோம். ஆனால் எல்லாச் சமயங்களிலும் நன்றி என்ற வார்த்தையோடு நிறுத்திவிடுவதில்லை. பிறர் செய்த உதவிக்கேற்ப, நமது நன்றி உணர்வை வெளிப்படுத்துகின்ற விதமும் வேறுபடுகிறது. சாதாரண உதவி என்றால் நன்றி என்ற வார்த்தை போதுமானது. ஆனால் மிகப் பெரிய உதவி என்றால் நமது நன்றியுணர்வை வெளிப்படுத்த இன்னும் பல வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றோம. உதாரணமாக உயிர் போய்விடுமோ என்ற பயத்திலே இருக்கின்ற போது, ஒருவர் உதவி செய்தார் என்றால் அவர் செய்த உதவி நமது மனதின் ஆழத்தில் பதிகிறது. வாழ்நாள் முழுதும் அவரை மறக்கமாட்டோம். அவர் செய்த அந்த உதவியை, செயலை அதை செய்வதற்கான அவரது நல்ல மனதை பற்றி நாம் போற்றிப் புகழ்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். நமது நன்றியுணர்வை இதற்குமேல் வெளிப்படுத்த முடியாது என்பதைப்போல் புகழ்ந்து சொல்வோம். ஆம் அன்பார்ந்தவர்களே, அதே போன்ற ஒரு நன்றி உணர்வோடு எழுதப்பட்ட திருப்பாடல் 34ஐத்தான் இன்று சிந்திக்கின்றோம்.

இந்தத் திருப்பாடலின் சில வரிகள் நன்கு அறிமுகமானவை.
34:8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்: அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.
34:10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.
அதோடு நாம் நமது வாழ்க்கைச் சூழலில் நமது நன்றி உணர்வை வெளிப்படுத்த பயன்படுத்திய சாதாரண வார்த்தைகளைத்தான் இந்தத் திருப்பாடல் முழுவதுமே ஆசிரியர் பயன்படுத்துகின்றார். எனவே இந்தத் திருப்பாடலை சிந்திப்பது அவசியம் என நினைக்கிறேன். இந்தத் திருப்பாடலை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், இதனுடைய பின்புலத்தை நாம் அறிந்திருப்பது அவசியம். அதற்கு சாமுவேல் முதல் புத்தகம் நமக்கு உதவுகிறது.

சாமுவேல் முதல் புத்தகம் 16:1
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, இஸ்ரயேலின் அரசராகத் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறங்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுவருவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்: ஏனெனில் அவர் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் என்றார்.

இவ்வாறு தந்தையாம் இறைவன் சவுலைப் புறக்கணித்து, தாவீதை அரசனாக தேர்ந்தெடுத்தார். சாமுவேலும் தந்தையாம் இறைவன் சொற்படி, தாவீதை அபிஷேகம் செய்தார். இதனால் சவுல் கோபமடைகிறார். தாவீதைக் கொலை செய்யத் தேடுகிறார். தாவீது தன் உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடுகிறார். கொலை செய்யப்படப் போகிறோம் என்ற நேரத்தில் நமக்கு எவ்வளவு பயம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
சாமுவேல் முதல் புத்தகம் 21:10 சொல்கிறது
பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார்.

காத் அரசன் ஆக்கீசு இஸ்ராயேலுக்கு எதிரி இருப்பினும் கூட அங்கு சென்று அடைக்கலம் தேடுகிறார். ஏனெனில் காத் அரசன் ஆக்கிசுவைவிட தாவீது சவுல் அரசனுக்கு அஞ்சுகிறார்.

சாமுவேல் முதல் புத்தகம் 21:11
ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். என்று பெண்கள் நடனமாடிப் பாடிக் கொள்ளவில்லையா?” என்றனர்.

தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினர். காத் அரசன் ஆக்கிசு அவரை கொன்றுவிடுவானோ என்று தாவீதுக்கு பயம். உயிர் பிரிந்துவிடுமோ வாழ்க்கை இதோடு முடிந்துவிடுமோ என்று பயம். எனவே அங்கிருந்து தப்பி ஒடுகிறார். அதுல்லாம் குகையில் தாவீதைச் சந்திக்கின்ற அவருடைய தந்தை மற்றும் சகோதரர்களிடம் நடந்த எல்லாவற்றையும் விளக்கி சொல்லுகிறார். அவருக்கு ஏற்பட்ட உயிர் பயம் அதிலிருந்து அவரை காத்த விதம், என எல்லாவற்றையும் சொல்லி இறைவனை புகழ்ந்து எழுதுகின்றார். இதைக் கேட்டு அனைவரும் மகிழ்கின்றனர். இதைத்தான் திருப்பாடல் 34: 2 சொல்கிறது.
நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்: எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.

உயிர் பிரிந்துவிடுமோ என்ற பயத்திலிருந்த தாவீது அரசனை தந்தையாம் இறைவன் காப்பாற்றியதை நினைத்து அவர் செய்த செயலை, தன் உயிரைக் காப்பாற்றியதை தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அந்த காரியத்தை செய்த இறைவனைப் போற்றி புகழ்ந்து அதுல்லாம் குகையிலே இந்தத் திருப்பாடலை எழுதுகிறார்.

தாவீது அரசன் கொண்டிருந்த பயத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால் 'பயம்' என்ற விவிலிய சொல்லின் மூலத்திற்கு செல்லவேண்டும். எபிரேயத்திலே 'பாஹாட்' என்ற வார்த்தை சொல்லப்படுகிறது. அதற்கு 'எலும்புகள் நடுங்குதல்' என்று பொருள். தாவீது கொண்டிருந்த பயத்திலே அவரது எலும்புகள் கூட ஆடிப்போயின. அந்த அளவுக்கு அவருக்கு பயம். அந்த பயத்திலிருந்து இறைவன் அவரை காப்பாற்றினார். சாவின் நுழைவாயிலுக்கு சென்ற அவரை தந்தையாம் இறைவன் காப்பாற்றினார். இதைத்தான் 34: 4வது சொற்றொடர் இவ்வாறு சொல்கிறது.
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்: அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்: எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.
அதே எபிரேய மொழியிலே பயத்தை குறிக்கிற 'யாரா' மற்றொரு சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. யாரா என்றால் மிகப் பெரிய மனிதனைப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் தானாக வருகின்ற மதிப்பு என்று பொருள். எனவே தாவீது அரசன், இவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து, சாவின் விளிம்பிலிருந்து தன்னைக் காப்பாற்றிய இறைவன் இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. மாறாக இவ்வளவு பெரிய வல்ல செயல்களைச் செய்கின்ற அவருக்கே அஞ்சவேண்டும் என சொல்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார் எனவும் நம்புகிறார்.

நம்முடைய வாழ்வில் சில நேரங்களில் பயம் நம்மை சூழ்ந்துகொள்கின்றது. ஆனால் இறை சந்நிதானத்திற்கு வந்து சில நிமிடங்கள் செலவழித்தப் பிறகு, நம் மனதில் ஒரு அமைதி பிறக்கின்றது. நமக்கு இருந்த பயம் இருந்த இடம் தெரியாமல் போகின்றது. இதை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்.
சவுல் தன்னை கொன்றுவிடுவாரோ என்று தாவீது அரசன் பயத்திலே இறை சந்நிதானத்தில் நுழைகிறார். அப்போது குரு அபிமலெக் உண்பதற்கு தூய அப்பங்களை தருகின்றார். அந்த அப்பங்களை உண்ட பிறகு அவர் இறை சந்நிதானத்தை விட்டு வெளியேறுகின்றார். அவரது பயமும் அவரைவிட்டு வெளியேறுகின்றது. அவரும் மன அமைதியுடன் வெளியில் செல்கின்றார்.

நமக்கும் நமது வாழ்வில் பயம் வருகின்றது. ஆனால் அந்த பயத்தை போக்க தூக்க மாத்திரகளை அல்லது மது பானங்களை உட்கொண்டு பயத்தை போக்கிக் கொள்ள நினைக்கிறோம். அது நிரந்தரமான தீர்வா? அடுத்த நாள் காலையில் எழும்போது மீண்டுமாக பயம் நம்மைப் பற்றிக்கொள்கின்றது. இதற்கு என்ன தான் விடிவு? இதற்கு விடிவு இறையச்சம் ஒன்றே வழி என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். இவ்வாறு ஆண்டவருக்கு அஞ்சும்போது, நமக்குப் பல நன்மைகள் நடக்கின்றன என தாவீது அரசன் பட்டியலிடுகின்றார்.

34:19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல: அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
34:20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்: அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
34:22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.
இதுவரை இறைவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி சொல்வோம். எல்லா ஆபத்துக்களிலிருந்தும் இறைவன் நம்மை காப்பாற்றி இருக்கின்றார். எனவே எதற்கும் அஞ்சாமல் நம்மை காக்கும் தேவனுக்கு மட்டுமே அஞ்சுவோம்.







All the contents on this site are copyrighted ©.