2011-05-10 15:44:21

மலேசிய கிறிஸ்தவ சமூகம் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அந்நாட்டின் மத இணக்க வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.


மே 10, 2011. மலேசியாவின் கிறிஸ்தவ சமூகம் மீது சில அடிப்படைவாதக் குழுக்கள் சுமத்தி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், அந்நாட்டின் மத இணக்க வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு பேராயர் மர்ஃபி நிக்கொலஸ் சேவியர் பாக்கியம்.
கிறிஸ்தவத்தை மலேசியாவின் அரசு மதமாகவும், கிறிஸ்தவர் ஒருவரை அந்நாட்டு பிரதமராகவும் அறிவிக்க மலேசிய கிறிஸ்தவர்கள் முயன்று வருகிறார்கள் என 'ஊட்டுசான் மலேசியா' என்ற பத்திரிகை வெளியிட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானது என உரைத்த பேராயர் பாக்கியம், இது குறித்த அரசு விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.
மதங்களிடையே பகைமையை வளர்த்து அவர்களின் நல்லிணக்க வாழ்வைக் கெடுப்பதற்கு காரணமாக இருக்கும் இத்தகையப் பொய் தகவல்களைப் பரப்புவோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார் பேராயர்.
தலத்திருச்சபை என்றுமே எவருக்கும் எதிரான பகை உணர்வுகளுடன் செயல்பட்டதில்லை என்ற பேராயர் பாக்கியம், தேசிய இணக்க வாழ்வையும் ஐக்கியத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் திருச்சபை பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதோடு செபத்திலும் ஈடுபட்டு வருகின்றது என்றார்.








All the contents on this site are copyrighted ©.