2011-05-10 15:45:27

ஆஸ்திரேலிய ஆயர் பேரவைக்கு பேராயர் வேலியோவின் உரை


மே 10,2011. உலகின் பல பகுதிகளிலும், சிறப்பாக ஆஸ்திரேலியாவிலும் புலம் பெயர்ந்தொருக்குத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளை இன்னும் ஆழப்படுத்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
புலம் பெயர்ந்தோர் மற்றும் வழிபோக்கர்களுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் அந்தோனியோ மரிய வேலியோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இப்புதனன்று ஆஸ்திரேலிய ஆயர் பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நாட்டை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படும் மக்கள் உடல், மனம், உணர்வளவில் சந்திக்கும் பல துன்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம் என்று கூறிய பேராயர் வேலியோ, இரண்டாம் வத்திக்கான் திரு அவை காலத்தில் இருந்தே, புலம் பெயர்ந்தோரின் துன்பங்களைத் துடைக்கும் பணியில் திருச்சபை முனைப்புடன் ஈடுபட்டு வந்துள்ளது என்றும், புலம் பெயர்ந்தோரை வரவேற்கும் ஒரு வாசலாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தலத் திருச்சபைகள் செயல்படுவதையே திருச்சபை வலியுறுத்தி வந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
வரவேற்பதுடன் மட்டும் திருச்சபையின் பணிகள் நின்று விடுவதில்லை. அடைக்கலம் தேடி ஒரு நாட்டிற்குள் புலம் பெயர்ந்தோரின் மாறுபட்ட கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மதிப்பதிலும் தலத் திருச்சபைகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராயர் வேலியோ கேட்டுக் கொண்டார்.
புறக்கணிக்கப்பட்ட பலருக்குக் கல்விப் பணி புரிந்து வந்த ஆஸ்திரேலியப் புனிதர் மேரி மெக்கில்லாப்பின் வழிநடத்தலால் ஆஸ்திரேலியத் திருச்சபை புலம் பெயர்ந்தோர் பணியில் உலகின் பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் பேராயர் வேலியோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.