2011-05-09 16:04:22

உலகின் மிகவும் வறிய 48 நாடுகள் அடுத்தப் பத்து ஆண்டுகளில் பாதி குறைக்கப்பட வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்


மே 09,2011. வறுமையில் வாடும் ஒவ்வொரு நாடும் தங்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், பிற நாடுகளிலிருந்து உருவாகும் பல அதிர்வுகளைச் சமாளிக்க முடியும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியுள்ள நாடுகளின் தலைவர்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இஞ்ஞாயிறன்று ஆரம்பித்துள்ள ஒரு கருத்தரங்கின் துவக்க உரையில் பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில், பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவு அடைந்துள்ள 48 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கல்வி, நலவாழ்வு, சமுதாயப் பாதுகாப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளையும், மிக முக்கியமாக, ஒவ்வொரு மனிதருக்கும் தேவைப்படும் அடிப்படை உணவு பாதுகாப்பையும் தங்கள் மக்களுக்குத் தரும் முயற்சிகளை இந்நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
பொருளாதாரத்தில் விரைவான வளர்ச்சி கண்டுள்ள இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மிகவும் வறிய நாடுகளின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தினால், மில்லேன்னியப் பொருளாதாரக் கனவுகளை அடைய முடியும் என்பதை ஐ.நா.பொதுச் செயலர் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
தற்போது மிகவும் வறிய நாடுகள் என்று கருதப்படும் 48 நாடுகள் அடுத்தப் பத்து ஆண்டுகளில் பாதிக்குப் பாதி குறைக்கப்பட வேண்டும் என்று கூறுவது தூரத்துக் கனவாகத் தெரிந்தாலும், அதை அடையும் வழிமுறைகள் உலக நாடுகளின் கைகளில் இருப்பதை தான் நம்புவதாகவும் பான் கி மூன் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.