2011-05-07 15:21:43

திருத்தந்தை : இத்தாலியின் பொதுநிலை கத்தோலிக்கர் அந்நாட்டின் பல நெருக்கடியான காலங்களில் தூண்களாக இருந்துள்ளார்கள்


மே07,2011. தங்களது திறமைகள் அனைத்தையும், தங்களது வாழ்க்கையின் ஆன்மீகம், அறிவு, நன்னெறி ஆகிய அனைத்தையும் தாராளத்துடன் அர்ப்பணிக்கக்கூடியவர்கள், இன்றைய இத்தாலி நாட்டின் பொது வாழ்வுக்குத் தேவைப்படுகிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய வரலாற்றில் பல நெருக்கடியான கட்டங்கள் வழியாக அந்நாடு கடந்து வந்துள்ளது, அச்சமயங்களில் அரசியலிலும் நிறுவனங்களிலும் வேலை செய்த மிகுந்த பக்தியுள்ள பொதுநிலை கத்தோலிக்கரால் நாடு மீண்டும் உயிரூட்டம் பெற்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இத்தாலிய தேசிய பொதுநிலை கத்தோலிக்கக் கழகத்தின் 14வது மாநாட்டிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இந்தக் கழகத்தினர் விசுவாசத்தின் அழகை எடுத்துச் சொல்பவர்களாகத் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
உரோமையில் இவ்வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள மூன்று நாள் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய செய்தியில், கத்தோலிக்கர், இக்காலத்திய மாயைத் தோற்றங்களில் சிக்கி விடாமலும் அதேசமயம் நம்பிக்கையையும் மாண்பையும் இழக்காமலும் வாழ வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் கடவுளின் குழந்தைகள் என்ற தங்களது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூழலில், நீதி, அமைதி, சுதந்திரம், உணவு ஆகியவைகளுக்காக உழைக்குமாறும் திருத்தந்தை தனது செய்தியில் கேட்டுள்ளார்.
இவ்வெள்ளிக்கிழமை தொடங்கிய 14வது தேசிய பொதுநிலை கத்தோலிக்கக் கழக மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.