2011-05-07 16:04:31

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
இன்று அன்னை தினம். உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று பல நாடுகளில் இவ்வாண்டு மே மாதம் 8ம் தேதி கொண்டாடப்படும் அன்னை தினத்தை நம் ஞாயிறு சிந்தனையின் முதல் பகுதியாக்குவோம்.

இந்த நாளை அன்னை தினம் என்று ஒருமையில் அழைப்பதா? அன்னையர் தினம் என்று பன்மையில் அழைப்பதா? என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் இத்தினத்தை அதிகாரப் பூர்வமான ஒரு நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்ட Anna Jarvis என்பவர் இக்கேள்விக்குச் சரியான விடை அளிக்கிறார்:
"இது அன்னை தினம்தான். அன்னையர் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னையைத் தனிப்பட்ட வகையில் சிந்தித்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை, இந்த நாள். ‘அன்னையர்’ என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல." என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

Anna Jarvis பாடுபட்டு உருவாக்கிய இந்த நாள், சில ஆண்டுகளிலேயே வியாபார மயமாகிவிட்டதைக் கண்டு மிகவும் மனம் நொந்தார். வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள், இனிப்பு வகைகள் என்று அன்னை தினம், வியாபாரத் திருநாளாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. இந்த வியாபாரப் பிடியிலிருந்து அன்னை தினத்தை விடுதலை செய்து, நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் உரிய மதிப்பை வழங்குவது நம் கடமை!

அம்மாவை, அன்னையை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும் மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம் 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இந்தக் கவிதை உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மைப் பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்கிறது. இதோ அக்கவிதை:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்:
வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித் தருவதற்காக, எமது குழந்தைகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு நாங்கள் விடமாட்டோம்.
ஒரு நாட்டுப் பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டுப் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

தாய், அல்லது அன்னை என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்ணாக அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை உருவாக்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இக்கவிதை எழுதப்பட்டது. அப்போரின் விளைவுகளைக் கண்ட Julia எழுதிய இவ்வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் கூறும் கவிதையாக உள்ளது. கடந்த திங்களன்று – மே 2, 2011 - ஓசாமா பின் லேடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். உலக அமைதிக்குப் பெருமளவில் ஊறு விளைவித்த ஒரு மனிதரின் மரணம் ஓரளவு நிம்மதியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், நமது நிலை என்ன? நிம்மதிக்குப் பதில் இன்னும் அதிக பயத்தை, கவலைகளை உருவாக்கியுள்ளது. உண்மைதானே?

இவ்விதம் பயத்தில், சந்தேகத்தில் தொடர்ந்து வாழும் இவ்வுலகிற்கு தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இந்த அன்னை தினம் வெறும் வியாபாரத் திருநாளாக இல்லாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
Julia எழுதிய கவிதையின் இறுதி வரிகள் அன்னை தினத்தையும், நாம் கொண்டாடி வரும் உயிர்ப்புவிழா காலத்தையும் இணைக்க உதவியாக உள்ளன. அந்தக் கவிதையின் கடைசி வரிகளிலிருந்து இன்றைய நற்செய்திக்கு ஒரு தொடர்பை நாம் உருவாக்கலாம்.

படைப்பின் மூலம் உலகில் இறைவனின் முத்திரை பதிக்கப்பட்டது. கண்ணுக்குப் புலப்படாத அந்த இறைவனை மனித உருவில் நம் மத்தியில் கொண்டுவந்தவர் இயேசு. எத்தனையோ சீசர்கள், மன்னர்கள் இந்த உலகை ஆட்டிப் படைத்திருந்தாலும், அவர்கள் அனைவரும் இயேசுவின் வலிமைக்கு முன் அடையாளம் இன்றி மறைந்து விட்டனர். ஆனால், இயேசுவின் உண்மையான வல்லமையைச் சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சீசரைவிட இறைவன் வலிமை மிக்கவர், சீசரை வென்று, இறைவனின் அரசை இயேசு நிறுவுவார் என்று சீடர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த உச்சகட்ட எதிர்பார்ப்பில், அவர் பரிதாபமாய் கொலை செய்யப்பட்டு இறந்ததும், இறைவன் உலகை விட்டுச் சென்று விட்டாரே என்ற ஏமாற்றம் அதிகம் உருவானது. அந்த ஏமாற்றத்தில் சீடர்கள் பலரும் மனம் உடைந்து, பயந்து, பதுங்கி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி காலத்தைக் கடத்தினர். அவர்கள் மத்தியில் வாழ்ந்த பெண்கள் இன்னும் நம்பிக்கையை இழக்காமல், துணிவோடு கல்லறைக்குச் சென்றனர். உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. நம்பிக்கை அழிக்கப்பட்ட இந்த உலகில் மீண்டும் இறைவனின் முகத்தைப் பதிக்க பெண்கள் முக்கிய காரணமாய் இருந்தனர். 'கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்' என்ற செய்தி சொல்லப்பட்டது.
இந்த நற்செய்தியைக் கேட்டும், கேட்காதது போல் தங்கள் துன்பத்தில் மூழ்கிய இருவர் இன்றைய நற்செய்தியின் நாயகர்கள். கலிலேயாவுக்குச் செல்லாமல், எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற இரு சீடர்கள், விரக்தியின் உச்சியை அடைந்தவர்கள். நமது நாயகர்களில் ஒருவரது பெயர் கிளயோப்பா என்று குறிக்கப்பட்டுள்ளது. (லூக்கா 24:18) மற்றவரது பெயர் குறிக்கப்படவில்லை. அந்த இரண்டாவது சீடராக நம்மை இணைத்து, இப்பயணத்தைத் தொடர்வோம்.

பதினோரு கிலோமீட்டர் நீளமான இந்தப் பயணம் இரண்டு மணி நேரங்களாவது நடந்திருக்க வேண்டும். அதுவும், இந்தப் பயணத்தை ஆரம்பித்தபோது, இந்தச் சீடர்களின் கனத்த இதயம் அவர்களது வேகத்தை வெகுவாகக் குறைத்திருக்கும்.
இவ்விரு சீடர்களும் போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றனர் என்று நற்செய்தி கூறுகிறது. (லூக்கா 24:14) என்ன பேசியிருப்பார்கள்? அவர்களது உள்ளக் குமுறல்கள் புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக வெடித்திருக்கும். "நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம். ஆனால்..." இவ்விரு சீடர்களின் குமுறல்கள் பல தலைமுறைகளாய் நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு தானே இருக்கின்றன? நாம் எதிர்பார்த்தைவைகள் கிடைக்காதபோது, நாம் எதிர்பாராதவைகள் வந்து சேர்ந்தபோது உடைந்து போன நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

அந்த நேரத்தில் இயேசு அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். மனமுடைந்து செல்லும் இரு சீடர்களை இயேசு தாயன்போடு தேடிச் செல்கிறார். கனிவோடு பேசுகிறார், கடிந்து கொள்கிறார், பொறுமையாய் விளக்குகிறார். அந்தத் தாய் இறுதியில் உணவைப் பரிமாறிய அழகில் இவ்விரு சீடர்களின் கண்கள் திறக்கின்றன.
அன்னை தினத்தன்று நமக்குத் தரப்பட்டுள்ள இந்த நற்செய்தியில் தாயாகவும் தன்னை வெளிப்படுத்தும் இறைவனைச் சந்திக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தத் தாயின் கனிவு, கண்டிப்பு, பொறுமை, பகிர்வு அனைத்தையும் நமது வாழ்வுப் பயணத்தில் இன்னும் ஆழமாக உணர்ந்துகொள்ள இறைவனை வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.