2011-05-06 16:15:12

வத்திக்கான் நகரில் பணி செய்யும் சுவிஸ் கார்ட்ஸ்களுக்கு திருத்தந்தை பாராட்டு


மே06,2011. சுவிஸ் கார்ட்ஸ்(Pontifical Swiss Guards) எனப்படும் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் வத்திக்கான் நகரத்தில் பணி செய்வதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்திக் கொள்ளுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
1527ம் ஆண்டு மே ஆறாம் தேதி பேரரசர் ஐந்தாம் சார்லஸின் படைகள் உரோமை நகரைச் சூறையாடிய போது திருத்தந்தை ஏழாம் கிளமென்ட்டைப் பாதுகாப்பதற்காக 147 சுவிஸ் நாட்டுப் படைவீரர்கள் தங்கள் உயிரை இழந்தனர். இதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மே ஆறாம் தேதி வத்திக்கானில் புதிய சுவிஸ் கார்ட்ஸ் சேர்க்கப்படுகிறார்கள். இவ்வெள்ளிக்கிழமை 34 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இந்தப் புதியவர்கள், இன்னும் ஏற்கனவே பணியில் இருக்கும் மெய்க்காப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை அக்காலத்தில் உரோம் சூறையாடப்பட்டது பற்றிய நினைவானது இக்காலத்தில் காணப்படும் மிகவும் ஆபத்தான ஒரு சூறையாடல் முன்வைக்கும் அச்சுறுத்தல் குறித்து சிந்திக்க வைக்கின்றது என்றார்.
இக்காலத்தில் இந்த அச்சுறுத்தல் ஆன்மீக வாழ்க்கையில் காணப்படுகின்றது என்றும் இன்றையச் சமூகச் சூழலில் பல இளையோர் மேலோட்டமான கருத்துக்கோட்பாடுகளுக்குள் தள்ளப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்தப் புதிய சுவிஸ் கார்ட்ஸ், தங்களது பணிவாழ்வில் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை நன்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார் அவர்.
வத்திக்கான் நகரத்திற்குள் இந்த மெய்க்காப்பாளர்கள் ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவித்த பாப்பிறை வத்திக்கான் பசிலிக்காவுக்கு வரும் விசுவாசிகளுக்கு இவர்களின் வாழ்வு, மேலும் மேலும் உள்தூண்டுதலை ஏற்படுத்தும் என்பதில் தான் நம்பிக்கை கொள்வதாகக் கூறினார்.
19க்கும் 30 வயதுக்கும் உட்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க இளைஞர், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் குறைந்தது 174 செ.மீ.உயரம் இருக்க வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.