2011-05-05 15:51:14

ஒசாமா பின் லேடனின் மரணம் முழுமையான உலக அமைதிக்கு உத்திரவாதம் அல்ல - லாகூர் முன்னாள் பேராயர்


மே 05,2011. உலக அமைதிக்கு பெருமளவில் பாதிப்புக்களை உருவாக்கி வந்த ஒசாமா பின் லேடனின் மரணம் முழுமையான உலக அமைதிக்கு உத்திரவாதம் அல்ல என்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் முன்னாள் பேராயர் லாரன்ஸ் ஜான் சல்தானா கூறினார்.
ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பேராயர் சல்தானா, பின் லேடனின் மரணம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எவ்வகைப் பாதிப்புக்களை உருவாக்கும் என்பதை தற்போது கணிக்க முடியாது என்றும், அரசு கிறிஸ்தவ கோவில்கள், மற்றும் நிறுவனங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து வருகிறது என்றும் கூறினார்.
பாகிஸ்தானில் இராணுவச் செயல்பாடுகள் அதிகம் உள்ள ஒரு பகுதியில் அரசு, அல்லது இராணுவத்திற்குத் தெரியாமல் ஒசாமா பின் லேடன் வாழ்ந்து வந்தது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.பாகிஸ்தானின் தலையாயப் பிரச்சனையான தீவிர வாதத்தை ஒழிக்க அனைத்து மக்களும் முன் வர வேண்டுமென்று பாகிஸ்தான் பிரதமர் Gilaniயும், அல் கெய்தா அமைப்பின் தலைவனுக்கு அரசு உதவிகள் செய்ததென்பது ஆதாரமற்ற கட்டுக் கதை என்று பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Ali Zardariயும் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.