2011-05-04 15:48:17

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 04, 2011. பன்னிரெண்டு நாட்களாக பாஸ்கா சடங்குகள், விழாக்கொண்டாட்டங்கள், அருளாளர் பட்டமளிப்பு என உரோம் நகரை நிறைத்திருந்த திருப்பயணிகள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, உரோம் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், இப்புதனன்று புனித பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெற்ற திருத்தந்தையின் பொதுமறைபோதகத்திலும் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர். உரோம் நகரின் தற்போதைய காலநிலை கடந்த இரண்டு நாட்களாக பகலில் பிரகாசமாகவும் இரவில் மழையாகவும் இருந்து வருகிறது. இப்புதன் காலையும் நல்ல சூரிய ஒளியுடன், மிதமான வெப்பத்துடன் துவக்கப்பட, உரோம் நேரம் 10.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் பகல் 2 மணிக்கு தன் புதன் பொதுமறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
நாம் இன்று துவங்கும் மறைக்கல்வி புதிய தொடர் செபம் பற்றியதாக, குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கே உரிய செபம் பற்றியதாக இருக்கும் எனத் துவக்கினார் திருத்தந்தை. கிறிஸ்தவர்களின் செபம் என்பது, கிறிஸ்து கொணர்ந்த புதிய வாழ்வெனும் கொடையில் தன் அடிப்படையைக் கொண்டுள்ளது. செபம் என்பது ஒரு கலை, அதில் இறைமகனாம் கிறிஸ்துவே நம் உன்னத ஆசிரியர். அதே வேளை, செபம் என்பது மனித அனுபவத்தின் ஒரு பகுதி. இதையே நாம் எகிப்து, மெசப்பொட்டேமியா, கிரேக்கம் மற்றும் உரோமைய தொன்மைக் கலாச்சாரங்களில் காண்கிறோம்.
இறைவனைக் காண்பதற்கான விருப்பம், இறை இரக்கம் மற்றும் மன்னிப்பு அனுபவம் பெறுதல், நற்பண்பில் வளர்தல், நாம் செய்யும் அனைத்திலும் இறைவனின் உதவியை அனுபவித்தல் போன்றவைகளின் அழகிய வெளிப்பாடுகளை அக்கலாச்சாரங்களில் பார்க்கிறோம். மனித வாழ்வின் இறுதி நோக்கையும், அவன் இறைவனைச் சார்ந்தே வாழவேண்டியவன் என்பதையும் ஆழமாகப் புரிந்துகொள்ள மனிதனைத் திறக்கிறது செபம் என்பதை இக்கலாச்சாரங்கள் ஏற்றிருந்ததையும் காண்கிறோம்.
புறவினத்தாரின் மதங்களில் இறைவனுக்கான மனிதகுலத்தின் ஆழமான ஏக்கத்தின் வெளிப்பாடாகத் தெரிந்த இறை உதவிக்கான விண்ணப்பம், புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் தன் உயரிய வெளிப்பாட்டையும் நிறைவையும் கண்டது. இறை வெளிப்பாடானது, இறைவனுக்கான மனிதனின் உள்மன ஆசையைத் தூய்மைப்படுத்தி நிறைவேற்றும் அதேவேளை, செபத்தின் வழியாக விண்ணகத்தந்தையுடன் ஆழமான உறவைக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இயேசுவின் சீடர்களோடு இணைந்து நாமும் அவரை நோக்கி, 'எமக்கு செபிக்க கற்றுத் தாரும்' எனக் கேட்போம்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.