2011-05-03 16:20:33

விவிலியத் தேடல் - திருப்பாடல் 32


மே03,2011 RealAudioMP3 தவறுவது மனித இயல்பு என்று சொல்லுகிறோம். இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு கூற்று. தவறு செய்யாத மனிதன் இல்லை என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. அப்படியானால் நாம் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வதில் அல்லது ஒத்துக் கொள்வதில் எந்தத் தயக்கமுமே இருக்கக் கூடாது. இது தான் நியாயம்.
அன்பார்ந்தவர்களே! நமது அன்றாட வாழ்வில் இது சிந்தனைக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக மாறிவிட்டது. நமது அன்றாட வாழ்வில் நடப்பது எல்லாமே இதற்கு நேர்எதிரானது. நாம் செய்கின்ற தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு மறைக்க நினைக்கிறோம். பிறர் பார்வையில் நாம் நல்லவர்களாக, நீதிமான்களாக நிலைத்து நிற்க ஆசைப்படுகிறோம். இந்த மனநிலை தவறு என திருப்பாடல் 32 தெள்ளத் தெளிவாக நமக்குச் சொல்லுகின்றது. நாம் இன்று சிந்திக்கின்ற திருப்பாடல் 32 ஓர் அருமையான திருப்பாடல். நாம் செய்த தவறை ஒத்துக்கொண்டு மறைக்காமல், அதை அறிக்கையிட்டு இறை இரக்கத்தை பெற்று மகிழ்ச்சியாக வாழ நம்மை அழைக்கின்ற ஒரு திருப்பாடல்.
தவறுவது மனித இயல்பு என்று சொல்லுகிறோம். அப்படியானால் நாம் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வதில் அல்லது ஒத்துக் கொள்வதில் எந்தத் தயக்கமுமே இருக்கக் கூடாது என்று ஏற்கெனவே சொன்னேன். ஆனால் நாம் தவறை மறைக்கத் தான் நினைக்கிறோம். அப்படி நாம் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள நினைக்காமல் மறைக்க நினைப்பதற்கான காரணம் என்ன?
நான் இந்தத் தவறைச் செய்தேன் என்று பிறர் அறிந்தால், என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? இவர் நல்லவர் என நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் நான் செய்த தவறைத் தெரிந்து கொண்ட பிறகு என்னை நல்லவர் என்று நினைப்பார்களா? எனவே பிறர் முன்னிலையிலே என்னுடைய நன்மதிப்பு கெட்டுவிடும் என்பதற்காக நாம் எல்லா சமயங்களிலுமே நாம் செய்த தவறை மறைக்க நினைக்கின்றோம். நமது பார்வையில் தவறு செய்யாதவர் மட்டுமே நல்லவர், நீதிமான். ஆனால் இறைவனுடைய பார்வையில் செய்த தவறை ஒத்துக் கொண்டு மறைக்காமல் அறிக்கையிட்டு மன்னிப்பு பெற்று மீண்டுமாக மகிழ்ச்சியான வாழ்வில் நுழைபவரும் நல்லவர் நீதிமான். இதைத் தான் திருப்பாடல் 32:5 இவ்வாறு சொல்கிறது.
'என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்: என் தீச்செயலை நான் மறைத்ததில்லை: ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன் என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்'.
நமது நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே நாம் நம்முடைய தவறுகளை மறைக்க நினைக்கின்றோம். இவ்வாறு நாம் செய்த தவறுகளை, குற்றங்களை மறைப்பதால் வரும் விளைவுகள் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
முதலாவதாக குற்ற உணர்ச்சி:
நாம் செய்த தவறு பிறருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சிறுவயதிலிருந்தே இறைவனின் கட்டளைகள் மற்றும் அறநெறி கூறுகளோடு வளர்க்கப்பட்ட நமது மனசாட்சிக்கு நன்கு தெரியும். ஆனால் நாம் அதை மறந்து விடுகிறோம். நம் செயல்களைச் சரி, தவறு என பிறர் மதிப்பிட்டு கூறுகிறார்களோ இல்லையோ நமது மனசாட்சி கண்டிப்பாக நமக்குச் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது. நாம் செய்த தவறுகளை நமது மனசாட்சி சுட்டிக் காண்பித்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை பல சமயங்களிலே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி தான் சிறுவயதிலே செய்த ஒரு தவறை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆனால் இப்பொழுது அவருக்குத் திருமணமாகி குழந்தைகளும் இருக்கின்றார்கள். இப்பொழுதும் கூட சிறுவயதிலே அவர் செய்த தவறு அவ்வப்போது நினைவிற்கு வந்து அவரை வேதனைப் படுத்துவதாகச் சொன்னார். அதிலிருந்து வெளிவர முடியாமல் நிம்மதி இழந்து வாடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். அன்பார்ந்தவர்களே உண்மைதான். நமது குற்ற உணர்ச்சி சிறிதளவேனும் நம்மை வேதனைப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. தவறு செய்து அதை மறைத்தவர்கள் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழ முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாம் செய்கின்ற தவற்றை மறைக்கின்றபோது, நமது குற்ற உணர்ச்சி நமது மனதை, நிம்மதியை கெடுக்கின்றது என்று சொன்னேன். ஆனால் திருப்பாடல் ஆசிரியர் அதற்கும் ஒரு படி மேலே சென்று நமது குற்றங்களை மறைக்கின்றபோது அது நமது உடலுக்கும ஊறு விளைவிக்கின்றது என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் நமக்குச் சொல்கிறார். திருப்பாடல் 32: 3
'என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின'.
நான் அடுத்ததாக சொல்ல நினைப்பது நாம் செய்கின்ற தவற்றை மறைக்கின்றபோது நாம் செய்யப் போகிற தவறுக்கு அடித்தளமிடுகிறோம் என்பது தான். இதற்குச் சரியான ஓர் உதாரணம் தாவீது அரசன். உரியாவின் மனைவி பெத்சபாவை அநீதியாக தனதாக்கிக் கொண்டார். இது அவர் செய்த முதல் தவறு. இதை அவர் மறைப்பதற்கு உரியாவை போர்களத்திலிருந்து வீட்டிற்கு அனுப்புகின்றார். ஆனால் உரியாவோ வீட்டிலே உறங்க மறுத்து மீண்டுமாக போர்களத்திற்கு செல்கிறான். இறுதியிலே வேறு வழி இல்லாமல் உரியாவை போர்களத்தின் மத்தியிலே அனுப்பி கொலை செய்கிறார் தாவீது. இது அவர் செய்த இரண்டாவது தவறு. இவ்வாறு தான் செய்த முதல் தவற்றை மறைத்ததன் வழியாக, தான் செய்த இரண்டாவது தவறுக்கு அடித்தளமிடடார்.
நம் வாழ்விலே நாம் செய்த ஒரு தவறை மறைக்க பல தவறுகளைச் செய்திருக்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம். அத்தருணங்களில் மட்டுமல்ல, அவை நினைவுக்கு வருகின்ற தருணங்களிலெல்லாம் நிம்மதி இழந்து விடுகிறோம் என்பது தான் உண்மை. ஆனால், திருப்பாடல் ஆசிரியர் இந்தத் திருப்பாடலின் வழியாக இந்த நிம்மதி இழந்த நிலைக்கு ஒரு விடிவைச் சொல்லுகிறார். நாம் செய்த தவறை மறைப்பதற்கு பதிலாக ஏற்றுக்கொண்டு மறைக்காமல் அதை அறிக்கையிட்டு இறைவனுடைய மன்னிப்பை பெற்று மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை தனது வாழ்வு அனுபவத்தின் வழியாக எடுத்துச் சொல்கிறார்.
இது வரை நாம் செய்த தவற்றை மறைப்பதால் வரும் விளைவுகளைப் பற்றி சிந்தித்தோம். இனி அவற்றை மறைக்காமல் அறிக்கையிடும் போது வரும் பலன்களைப் பற்றி சிந்திப்போமா?
நாம் செய்த தவறுகளை மறைக்கும்போது, அவை நம் மனதிலே அப்படியே தங்கி விடுகின்றன. நமது இதயம் கனத்த இதயமாக மாறிவிடுகின்றது. கனத்த இதயம் நமது உடல், மனது என இரண்டையுமே பாதிக்கிறது என்பதை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். நமது கனமான இதயத்தை இலேசான இதயமாக மாற்ற வேண்டுமானால் கனத்த இதயத்தை இறக்கி வைக்க வேண்டும். உதாரணமாக, முழுவதுமாக தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை நம்மால் தூக்க முடியாது. அந்த தண்ணீரைக் கொட்டி விட்டால் அந்த பாத்திரத்தை தூக்குவது எளிதாக இருக்கும். அது போலவே, நாம் செய்த தவறை நமது மனதிலே வைத்துக் கொண்டிருக்கும்போது, நமது இதயமானது கனத்த இதயமாக மாறுகிறது. அதை இறக்கி வைத்துவிட்டால் அறிக்கையிட்டு விட்டால் நமது இதயமும் இலேசான இதயமாக மாறுகின்றது. அந்த இதயத்திலே நிம்மதி பிறக்கின்றது.
நமது தவறுகளை அறிக்கையிடுவதால் வருகின்ற நன்மைகளிலே அடுத்ததாக சொல்ல நினைப்பது நாம் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெறுகிறோம். இதற்கு அருமையான ஒரு உதாரணம் ஊதாரி மைந்தன் உவமை. ஊதாரி மைந்தன் உவமை என்று சொன்னவுடனேயே முதலாவதாக தந்தையின் மன்னிப்பையும இரண்டாவதாக இளைய மகன் ஊதாரித்தனமாக எல்லாச் செல்வங்களையும் அழித்ததையும் அவன் தவறான வழிகளில் சென்று தன் வாழ்வையே பாழ்படுத்திக் கொண்டதையும் தான் நாம் நினைத்துப் பார்ப்போம். ஆனால் இதற்குப் பின், வருகின்ற இறுதிக்கட்டம் அதிகமாக நமது கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் நினைத்துப்பாருங்கள். இளைய மகனுடைய இடத்திலே உங்களை வைத்துப்பாருங்கள். நீங்கள் இளைய மகனைப் போன்று எல்லா செல்வங்களையும் தவறான பாதையிலே வாழ்ந்து அழித்துவிட்டு திரும்பி வருகின்ற போது, உங்கள் தந்தை உங்கள் தவறுகளைக் கண்நோக்காமல் நீங்கள் தொலைவில் வரும்போதே ஓடி வந்து கட்டித் தழுவி என் மகன் எனக்கு கிடைத்துவிட்டான் என்று சொல்லுகின்ற போது உங்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியல்லவா இருக்கும்? அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த நிச்சயமாக வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏன் இப்படி எல்லாம் செய்தாய் என எதுவுமே கேட்காமல் கட்டி அணைத்து மோதிரம், புத்தாடைகளை கொடுக்கும் போதும் அவற்றை வாங்கும் போதும் உங்கள் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை எந்த வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்? வாழ்நாள் முழுவதும் உடன் இருந்த மூத்த மகனுக்குக் கூட விருந்து கொடுக்காமல், அனைத்தையும் இழந்துவிட்டு வந்த உங்களுக்காக விருந்து கொடுக்கும் போது அந்த இடத்திலே உங்கள் மனது அளவில்லாத மகிழ்ச்சியடையும் அல்லவா? இந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டுமானால், நாம் செய்த தவறுகளை, குற்றங்களை மறைக்காமல் அறிக்கையிட்டு இறை இரக்கத்தைப் பெற வேண்டும்.
திருப்பாடல் 32:1-2
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்.
இந்த நவீன யுகத்திலே ஒப்புரவு அருள்சாதனம் என்பது கத்தோலிக்கத் திருச்சபை கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய கொடை. பிறருக்குச் செவிமடுப்பது என்பதே மிகவும் குறைந்து வருகின்ற இந்த காலத்திலே, பிறருடைய பாவங்களைக் கேட்டு, அதனின்று வெளிவருவதற்கு வழிவகைகளை சொல்லிக்கொடுத்து, இறைவனின் பிரதிநிதியாக இருந்து, பாவங்களை மன்னித்து, இறை அருளைப் பெற்றுத்தருவது கத்தோலிக்கத் திருச்சபை மனித சமுதாயத்திற்கு ஆற்றுகின்ற மாபெரும் காரியம். இதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் 8வது வசனத்திலே இப்படி குறிப்பிடுகின்றார்.
'நான் உனக்கு அறிவு புகட்டுவேன்: நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்: உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.'
கத்தோலிக்கத் திருச்சபையின் இந்த மாபெரும் கொடையைப் பெறாமல், நமது பாவங்களை மறைத்து, மகிழ்ச்சியை இழந்து, நிம்மதியை இழந்து வாழ்வது தேவையா? வாருங்கள் நமது தவறுகளை அறிக்கையிடுவோம். அளவில்லாத மகிழ்ச்சி பெறுவோம் என அழைக்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.








All the contents on this site are copyrighted ©.