2011-05-03 16:18:55

குடியேற்றதாரர் இறைவார்த்தையை அறிவிக்க உதவ முடியும் – பேராயர் வேலியோ


மே03,2011. ஆஸ்திரேலிய கத்தோலிக்கத் திருச்சபை அகதிகளுக்கும் குடியேற்றதாரருக்கும் ஆற்றி வரும் மேய்ப்புப்பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்திங்கள் முதல் 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் திருப்பீட குடியேற்றதார மற்றும் புலம் பெயர்வோருக்கான அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò.
ஆஸ்திரேலியத் திருச்சபையில் குடியேற்றதாரருக்கு மேய்ப்புப்பணியாற்றி வரும் ஆன்மீகக் குருக்களைச் சந்தித்து உரையாற்றிய பேராயர் வேலியோ, தற்போதைய வாழ்க்கையில் எதிர்நோக்கப்படும் இடர்பாடுகள், தொடர்ந்து நடந்து வரும் போர்கள் மற்றும் வன்முறை, மக்களைக் கட்டாயமாகத் தங்களது நாட்டை விட்டு வெளியேற வைக்கின்றன என்றார்.
ஒருவர் தனது சொந்த நாடு உட்பட எந்த நாட்டை விட்டுச் செல்வதற்கும் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கும் உரிமை உள்ளது என்று அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் கூறுவதையும் பேராயர் சுட்டிக் காட்டினார்.
மொழி, மதம், கலாச்சாரம், உணவு வகைகள் ஆகியவற்றினால் குடியேற்றதாரர் குடியேறிய நாடுகளில் பிரச்சனைகளை எதிர்நோக்கும்வேளை அவர்களும் அந்த நாடுகளுக்குப் பிரச்சனைகளாக இருக்கின்றார்கள், அத்துடன் அவர்கள் வழியாக பல காரியங்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கின்றார்கள் என்றார் பேராயர் வேலியோ.
குடியேற்றதாரர் போதுமான அளவு வரவேற்கப்பட்டால் அவர்கள் நற்செய்தியால் தொடப்பட்டு அதனை உலகிற்கு அறிவிப்பவர்களாகவும் மாறுவார்கள் என்றும் திருப்பீட அதிகாரி கூறினார்.
சுமார் 2 கோடியே 10 இலட்சம் மக்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ 50 இலட்சம் பேர் குடியேற்றதாரத் தொழிலாளர்கள், 22,500 பேர் அகதிகள் மற்றும் 2350 பேர் அடைக்கலம் கேட்டுக் காத்திருப்பவர்கள்.








All the contents on this site are copyrighted ©.